தெலுங்கானா: ரேவந்த் ரெட்டி வீசுன முதல் பந்து இடைக்கால சபாநாயகர்-பதவியே ஏற்க மாட்டோம் என கதறும் பாஜக!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபையில் எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் இடைக்கால சபாநாயகராக மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசியின் சகோதரர் அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் பதவியேற்க மாட்டார்கள்; பதவி பிரமாண நிகழ்வையே புறக்கணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வென்றது. ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களிலும் பாஜக 8, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 7, சிபிஐ 1 இடத்திலும் வென்றன.

முதல்வர் ரேவந்த் ரெட்டி: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். மாஜி நக்சலைட் சீதாக்காவும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பழங்குடிகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்பருதீன் ஓவைசி அதிரடி நியமனம்: இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக மஜ்லிஸ் கட்சியின் அக்பருதீன் ஓவைசி அறிவிக்கப்பட்டுள்ளார். மஜ்லிஸ் கட்சியின் தலைவரான ஓவைசியின் சகோதரர்தான் அக்பருதீன். பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கியவர். சந்திரயன்குட்டா தொகுதியில் 6-வது முறையாக வென்று எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு மஜ்லிஸ் கட்சியின் எம்.எல்.ஏ மும்தாஜ் அகமது கான் இதேபோல இடைக்கால சபாநாயகராக இருந்து எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அக்பருதீன் ஓவைசிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் தமிழிசை: இடைக்கால சபாநாயகராக நாளை காலை 8.30 மணிக்கு அக்பருதீன் ஓவைசிக்கு தெலுங்கானா ஆளுநருர் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு செய்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து புதிய சட்டசபையை கூட்டுவது, புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது என அடுத்த கட்ட பணிகளை இடைக்கால சபாநாயகர் அக்பருதீன் ஓவைசி மேற்கொள்வார். அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்ற பின்னர், முழு நேர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே விக்ரபாத் தொகுதி எம்.எல்.ஏ.வான தலித் தலைவர் கட்டம் பிரசாத் குமாரை சபாநாயகர் என அறிவித்தும் இருக்கிறது.

பாஜக புறக்கணிப்பு: இதனிடையே அக்பருதீன் ஓவைசியை இடைக்கால சபாநாயகராக நியமித்ததற்கு பாஜக மிக கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானா பாஜகவின் சர்ச்சைக்குரிய டி.ராஜா சிங், அக்பருதீன் ஓவைசியின் நியமனம் எதிர்பாராதது. தெலுங்கானாவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் தமது உண்மை முகத்தை காட்டிவிட்டது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பிஆர்எஸ் கட்சி, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, பாஜக மூன்றும் கூட்டணி வைத்துள்ளதாக விமர்சனம் செய்தவர்தான் முதல்வர் ரேவந்த் ரெட்டி. இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டது யார் யாருடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்பது. அக்பருதீன் ஓவைசி போன்ற ஒருவர் முன்னிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் பதவி பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்கிறோம் என அறிவித்துள்ளது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications