ரியல் எஸ்டேட் அதிபருக்கு ‛பளார்’ விட்ட பாஜக எம்பி.. மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதால் ஆத்திரம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து பணம் கேட்டு மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபரை பாஜக எம்பி எட்டலா ராஜேந்தர் திடீரென்று அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் பூச்சரம் ஐடி காரிடாரில் எகாசிலாநகர் அமைந்துள்ளது. கடந்த 1985 ம் ஆண்டில் 149 ஏக்கர் நிலத்தை அரசு துறையில் பணியாற்றி வரும் 2,976 ஊழியர்கள் வாங்கினர்.

அப்போது ஒரு ஏக்கர் ரூ.10 ஆயிரம் என்று விற்பனையானது. ஆனால் அந்த நிலம் அமைந்துள்ள இடம் என்பது புதர் மண்டி கிடந்தது. அதோடு நகரில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. இதனால் கொள்ளை சம்பவங்களுக்கு பயந்து யாரும் அங்கு குடியேறவில்லை.
இந்நிலையில் தான் சில ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் போலியான ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை விவசாய நிலமாக மாற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டனர். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. 2006, 2011 ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்குகளில் நிலத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
ஆனாலும் கூட சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு அந்த நில உரிமையாளர்களிடம் சில லட்சம் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்து வருகின்றனர். அதோடு பணம் கொடுக்க மறுப்பவர்களை மிரட்டுவதும், நாய்களை ஏவி விடுவதுமாக உள்ளனர். பெண்களை ஆபாசமாக திட்டி வந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மல்கஜ்கிரி லோக்சபா தொகுதியின் பாஜக எம்பி எட்டலா ராஜேந்தரிடம் உதவி கேட்டனர். இதையடுத்து எட்டலா ராஜேந்தர் சென்று விசாரித்தார். அப்போது ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் எட்டலா ராஜேந்தர் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் டென்ஷனான எட்டலா ராஜேந்தர், ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை அறைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றிய புகாரில் பாஜக எம்பி எட்டலா ராஜேந்தர் உள்பட 7 பேர் மீது பூச்சரம் ஐடி காரிடர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி எட்டலா ராஜேந்தர் கூறுகையில், ‛‛சம்பவ இடத்தில் நிலவிய சூழல் என்னை கோபப்படுத்தியது. தர்மத்தை காக்க வேண்டும். பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை காக்க வேண்டும் என்பதற்காக இதை செய்தேன். வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் திரும்ப திரும்ப பொதுமக்களின் பிரச்சனைகளை சரிசெய்வதில் தோல்வியடைந்துவிட்டனர். இதனால் நான் தண்டனை கொடுத்தேன். என் 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இப்படியொரு சட்டவிரோத செயலை நான் பார்த்தது இல்லை’’ ’’ என்று கூறினார்.












Click it and Unblock the Notifications