அதிகாலையில் அரங்கேறிய கொடூர விபத்து.. தெலுங்கானா எம்எல்ஏ பரிதாபமாக உயிரிழப்பு! காரணம் டிரைவர்? பகீர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா இன்று அதிகாலை நடந்த சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார்,
தெலுங்கானாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில், கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கிறது.

இதற்கிடையே அங்கே தெலுங்கானாவில் எதிர்க்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா என்பவர் இன்று அதிகாலை ஹைதராபாத்தில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது வெறும் 37. முதல் முறை எம்.எல்.ஏ.வான அவர் இன்று காலை நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
உயிரிழப்பு: திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் சாலை டிவைடரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. விபத்தில் சிக்கிய டிரைவர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர் இப்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பத்து நாட்களுக்கு முன்பு தான் நார்கட்பள்ளி என்ற பகுதியில் நடந்த மற்றொரு விபத்தில் லாஸ்யா சிக்கினார். இருப்பினும், அப்போது அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். கடந்த பிப்ரவரி13 ஆம் தேதி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நல்கொண்டாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த விபத்து ஏற்பட்டது.
அதில் அவருடன் இருந்த போலீஸ் அதிகாரி உயிரிழந்த போதிலும் நந்திதா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்தச் சூழலில் தான் வெறும் 10 நாட்களில், இன்று நடந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காரணம் டிரைவர்: இது குறித்து போலீசார் கூறுகையில், "லாஸ்யா நந்திதா கஞ்சிபவுலியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்து இருக்கிறது. டிரைவர் திடீரென தூங்கியதால் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம், வாகனத்தின் முன் பக்கம் மோசமாகச் சேதம் அடைந்துள்ளது. அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும் இந்த விபத்தில் காயமடைந்தார். நந்திதா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இப்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
யார் இவர்: தெலுங்கானா அரசியலில் முக்கிய நபராக இருந்தவர் லாஸ்யா நந்திதா.. எம்எல்ஏவாக தேர்வாகும் முன்பு இவர் கடந்த 2016 முதல் காவடிகுடாவில் கார்ப்பரேட்டராக இருந்தார். அப்போதே இவரது செயல்பாடுகள் தெலுங்கானா முழுக்க கவனத்தை ஈர்ப்பதாக இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1986ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த லாஸ்யா நந்திதா, 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தார். 2023 தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் செகந்திராபாத் கண்டோன்மென்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு இவர் காவடிகுடா வார்டில் கார்ப்பரேட்டராக பணியாற்றினார். நந்திதாவின் தந்தையும் மூத்த அரசியல் தலைவருமான ஜி.சயன்னா கடந்தாண்டு பிப். மாதம் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தந்தை மறைந்து ஓராண்டிற்குள் அவரது மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஆர்எஸ் மூத்த தலைவரும் கேசிஆர் மகனுமான கேடி ராமராவ், நந்திதாவின் திடீர் மரணத்திற்குத் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications