புதிய கட்சி தொடங்கும் கேசிஆர்.. பாஜகவை எதிர்க்க பயங்கர ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ - அடுத்த வாரம் அறிவிப்பு?
ஹைதராபாத் : பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பதற்காக தேசிய அளவில் ஒரு கட்சியை தொடங்க டி.ஆர்.எஸ் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் இல்லாத மாநில கட்சிகள் ஒன்றிணைந்த பிரமாண்ட கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தோற்கடிப்பது குறித்து, சந்திர சேகர் ராவ் பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களுடன் பேசி வந்தார்.

குடியரசு தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் 51.1 சதவீதம் பெற்றுள்ளன. அதாவது மொத்த வாக்குகளின் மதிப்பான 10,86,431ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 5,25,706. பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20,000 வாக்குகள் கூடுதலாக தேவைப்படுகிறது.

பொது வேட்பாளர்
பாஜக சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தோற்கடிக்க பாஜக கூட்டணியை தவிர்த்த அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேவை. காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தினாலும், அரசியல் எதிர்ப்பு நிலை காரணமாக மற்ற எதிர்க்கட்சிகள் சில காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களிக்காது என்ற நிலை உள்ளது.

சந்திரசேகர் ராவ்
தெலுங்கானா முதல்வரும் டி.ஆர்.எஸ் தலைவருமான சந்திர சேகர் ராவ் கடந்த சில மாதங்களாக சிவசேனா, திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாடி மற்றும் ஜேடிஎஸ) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார். ஆனால், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு எதிரான சக்திகளை அவரால் ஒருங்கிணைக்க முடியவில்லை. காங்கிரஸ் அல்லாத அணியை அமைப்பது பாஜகவுக்கு ஆதரவாகவே முடியும் என பல்வேறு கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் தேர்தலை குறிவைத்து
குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த, பிரமாண்ட கூட்டணியை அமைக்கும் முயற்சியிலும் கேசிஆர் ஈடுபட்டு வருகிறார். நாட்டிலேயே அதிகமான மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தர பிரதேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை கேசிஆர் சந்தித்தார். இந்தச் சந்திப்புகளின்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தோற்கடிப்பது குறித்தும் அவர் பேசியிருப்பதாக கூறப்பட்டது.

தேசிய கட்சி அமைக்க ஆலோசனை
இந்த நிலையில் சந்திரசேகர் ராவ் தனது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க புதிய கட்சியை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

புதிய கட்சி
இந்த புதிய கட்சிக்கு 'பாரத் ராஷ்ட்ர சமிதி' அல்லது 'நவபாரத் கட்சி' என பெயர் வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. பலம் வாய்ந்த பா.ஜ.கவை வெல்ல அகில இந்திய அளவில் புதிய கட்சியை உருவாக்கி, எதிர்க்கட்சிகளை ஒரே அணியாகத் திரட்டினால் அது பா.ஜகவுக்கு எதிரான வலுவான அணியாக இருக்கும் என சந்திரசேகர ராவ் கருதுகிறார். அந்த அடிப்படையிலேயே இந்த புதிய கட்சி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
வரும் ஜூன் 19-ஆம் தேதி தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை சந்திரசேகர் ராவ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என டி.ஆர்.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications