பாஜகவுடன் கூட்டு.. அனைத்து தொகுதியிலும் டெபாசிட் காலி.. நடிகர் பவன்கல்யாணுக்கு தெலுங்கானாவில் ஷாக்
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட நடிகர் பவன் கல்யானிண் ஜனசேனா கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. 71 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இன்று காலை முதல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியமைக்க தேவையான இடத்தை விட கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது.
அதாவது காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் தான் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளர்கள் மிகவும் மோசமான நிலையில் தோல்வியடைந்துள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளது.
அதாவது பவன் கல்யாண் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தெலுங்கானா சட்டசபை தேர்தலை சந்தித்தார். மொத்தம் 8 தொகுதிகளில் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார்.
இதில் குகட்பள்ளி சட்டசபை தொகுதி உள்பட 8 தொகுதிகளிலும் அவரது வேட்பாளர்கள் படுதோல்வியடைந்துள்ளனர். இந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் டெபாசிட்டை கூட பெற வில்லை. அதிலும் சில தொகுதிகளில் அவரது வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவாக ஓட்டுகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications