அரசு மருத்துவமனைகளுக்கு வராத மருத்துவர்கள்.. தனியாக மருத்துவமனை நடத்த தடை.. தெலுங்கானாவில் அதிரடி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்தவோ தனியார் நிறுவனத்தில் பணிபுரியவோ அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் சொந்தமாக கிளீனிக்கோ மருத்துவமனையையோ வைத்து நடத்தி வருவது வழக்கம். இல்லாவிட்டால் வேறு ஒரு பெரிய மருத்துவமனையில் பணியாற்றுவதும் வாடிக்கை.
இதனால் அரசு மருத்துவமனைக்கு தாமதமாக வருவது, சில சமயங்களில் வராமல் போவது போன்றவற்றால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இன்னும் சில மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பெரிய பெரிய சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைக்கு வர சொல்லி பரிந்துரைப்பதும் நடைபெறுகிறது.

தனியார் மருத்துவமனை
இதனால் தனியார் மருத்துவமனைகளில் பணத்தை செலுத்த முடியாமல் பலர் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் அதிக நேரமும் அரசு மருத்துவமனைகளில் குறைந்த நேரமும் மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதனால் நோயாளிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள்
இதனால் அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகளை நடத்த (Private Practice) தெலங்கானாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்தத்தை தெலங்கானா செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தது. அதில் தெலங்கானாவில் நேரடி பணி நியமனம் மூலம் சேர்க்கப்படும் அரசு மருத்துவர்களும், இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படும் ஆசிரியப் பணி அல்லாத தரப்பிலிருந்து வரும் மருத்துவர்களும் தனியே மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தெலுங்கானா
இதுகுறித்து தெலுங்கானா அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பலர் அரசு மருத்துவமனையில் இருப்பதில்லை. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அப்படியே அரசு மருத்துவமனைகளுக்கு வந்தாலும் வந்து சில நேரம் அமர்ந்திருந்து கையெழுத்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள்.

தெலுங்கானாவில் அதிரடி
அது போல் ஊரக பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் மருத்துவர்கள் சென்று பார்வையிட வேண்டும். அதையும் அவர்கள் செய்வதில்லை. இதனால் எத்தனையோ ஏழை எளிய நோயாளிகள் பணம் செலவு செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கு போவதற்கு பயந்து நோய் முற்றி இறந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அரசு மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications