ஆட்டு கொட்டகை டூ ஐ.ஐ.டி.. பழங்குடி மாணவியின் கனவை நிறைவேற்றிய தெலங்கானா அரசு.. சபாஷ் ரேவந்த் ரெட்டி!
ஹைதராபாத்: ஐ.ஐ.டி பாட்னாவில் படிப்பதற்கான இடம் கிடைத்தும் வறுமை சூழல் காரணமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி மாணவி பதாவத் மதுலதாவை மீட்டு அவரின் கல்விக் கனவை நிறைவேற்றியுள்ளார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராமலு, சரோஜி தம்பதி விவசாய கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் இளைய மகள் பதாவத் மதுலதா ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் 825 மதிப்பெண்ணுடன் டாப் ரேங்க் எடுத்தார். இதன் மூலம் பட்டியல் பழங்குடிக்கான ஒதுக்கீட்டில் ஐ.ஐ.டி பாட்னாவில் படிப்பதற்கான அட்மிஷனும் மதுலதாவை தேடிவந்தது. ஆனால், கூடவே ஜூலை 27ம்தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என்கிற தகவலும் இடியாய் வந்திறங்கியது. அது அவர்கள் குடும்பம் கற்பனை செய்திராத தொகை.

இது சாத்தியம் இல்லை என்று சொல்லி மதுலதா தன் பெற்றோருக்கு உதவி செய்ய ஆடு மேய்க்க சென்றுவிட்டார். இந்தத் தகவல் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சென்றது. அவர் உடனடியாக மதுலதாவுக்கு உதவி செய்ய தெலங்கானா பழங்குடி நலமேம்பாட்டு துறைக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் மாணவிக்கு ரூ.1.51 லட்சம் ஸ்காலர்ஷிப் வழங்கி உதவி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுலதா தன் பெற்றோருடன் சென்று தெலங்கானா அதிகாரிகளிடம் ஸ்காலர்ஷிப் தொகையை பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து, மாணவி பதாவத் மதுலதா கூறுகையில், "ஐ.ஐ.டி பாட்னாவில் அட்மிஷன் கிடைத்தது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால் எனது சீனியர்களிடம் பேசிய பிறகுதான் ஐஐடி பாட்னாவில் படிப்பதற்கு 3 லட்சம் ரூபாய் செலவாகும் என்ற தகவல் தெரியவந்தது. இவ்வளவு பெரிய கட்டணத்தை கட்ட முடியாது என்பதால் எனது கனவை நான் கைவிட்டுவிட்டேன். எங்கள் நிலையை அறிந்து உதவி செய்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.

மதுலதாவின் பெற்றோரும் தெலங்கானா அரசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர். மதுலதாவுக்கு தெலங்கானா அரசு 1.5 லட்சம் ரூபாய் காசோலை கொடுத்துள்ளது. மேலும், மடிக்கணினி வாங்குவதற்காக 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பி.டெக் படிப்பதற்கான மூன்று ஆண்டுகால கல்விச் செலவை ஏற்பதாக மாவட்ட அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதுள்ளனர். இதுதவிர பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் தொகை வரப்பெற்றுள்ளதாகவும் மதுலதா தெரிவித்துள்ளார். மதுலதா பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கல்வி கட்டணத்தில் ரூ.1 லட்சம் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications