முட்டாள்கள் தினம்.. கோயிலில் திருமணம் - போதையில் ஆணுக்கு தாலி கட்டிய இளைஞர்! அப்றம் என்னாச்சு?
ஐதராபாத்: தெலுங்கானாவில் குடிபோதையில் தனக்கு தாலி கட்டிய ஆட்டோ ஓட்டுநரோடுதான் வாழ்வேன் என இளைஞர் தாலியோடு வீட்டுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், டுமாபால்பேட் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் எப்போதும் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அங்கு இவரைபோலவே மது அருந்துவதற்காக வரும் 21 வயது இளைஞரோடு 22 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு நட்பு ஏற்பட்டு இருக்கிறது.

குடிபோதையில் பேச்சு
நாளடைவில் இவர்கள் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்து உள்ளனர். தினசரி ஒன்றாக மதுக்கடையில் குடிப்பதையும் வாடிக்கையாக வைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று வழக்கம் போல் அதே மதுக்கடையில் ஒன்றாக குடித்த இருவரும் போதை தலைக்கேறிய நிலையில் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று பேசி இருக்கின்றனர்.

கோயிலில் டும் டும் டும்
அதன் பின்னர் மதுக்கடையிலிருந்து ஒன்றாக புறப்பட்ட இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோகிநாத் கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு 22 வயது ஆட்டோ ஓட்டுநர், 21 வயது இளைஞரின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இதையடுத்து இருவரும் அவரவர் வீடுகளுக்கு தனித்தனியாக சென்றனர்.

வீட்டுக்கு சென்ற இளைஞர்
சில நாட்கள் கழிந்த நிலையில், திடீரென ஜோகிபேட் பகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்கு அந்த 21 வயது இளைஞர் சென்றிருக்கிறார். அங்கு ஆட்டோ ஓட்டுநரின் பெற்றோரிடம் நடந்ததை கூற அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். நான் என் கணவரோடுதான் வாழ்வேன் என்றும், தங்களை சேர்த்து வைக்குமாறு கூறிய அந்த இளைஞரை அவர்கள் விரட்டி அடித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்
இதனால் வேறு வழியின்றி காவல் நிலையம் சென்ற அந்த 21 வயது இளைஞர் போலீசாரிடம் நடந்ததை கூறி புகாரளித்து இருக்கிறார். தன்னுடைய பெற்றோரும் தன்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டதால் வாழ வழியில்லை என்றும், தன்னை ஆட்டோ ஓட்டுநரோடு சேர்த்து வைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பணத்தால் தீர்ந்த பிரச்சனை
இதனை தொடர்ந்து போலீசார் ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது தனக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என இளைஞர் கோரி இருக்கிறார். அதன் பின்னர் இருவரும் சமாதானம் பேசி ரூ.10,000 கொடுத்து ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லை என்று எழுதி வாங்கிக்கொண்டு பிரச்சனையை போலீசார் தீர்த்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications