தெலுங்கானா: நடுத்தெருவில் கைவிட்ட காங்கிரஸ்-தனித்தே போட்டியிடப் போவதாக ஜெகன் தங்கை ஷர்மிளா புலம்பல்!
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியில் எப்படியும் இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்.எஸ்.ஆர்.டி.பி. கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். ஷர்மிளா இப்போது தெலுங்கானா தேர்தலில் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதே பாணியில் தெலுங்கானா அரசியலில் குதித்தவர் ஜெகன் தங்கை ஷர்மிளா. தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.டி.பி. கட்சியை தொடங்கி அங்கு கால் பதிக்க எவ்வளவோ முயன்றார் ஷர்மிளா. எத்தனையோ போராட்டங்கள்.. அடிதடி என என்ன என்னவோ செய்து பார்த்தார் ஷர்மிளா. ஆனால் தெலுங்கானா மக்கள் அவரை ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

காங்கிரஸில் இணைய முடிவு: இதனை உணர்ந்து கொண்ட ஷர்மிளாவும் தனிக்கட்சி நடத்தி தேறமுடியாது என்பதால் காங்கிரஸ் ஜோதியில் இணைந்துவிடுவது என முடிவெடுத்தார். இது தொடர்பாக ஹைதராபாத் முதல் டெல்லி வரை சோனியா, ராகுல் என பல்வேறு சந்திப்புகள், பேச்சுகள் நடத்தினார். இதனால் எப்படியும் காங்கிரஸில் இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார் ஷர்மிளா.
தெலுங்கானா தேர்தல்: இப்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியை அமைத்துவிடும் என பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸுக்கு கெடு: ஆனாலும் ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை அக்டோபர் 1-ந் தேதிக்குள் தெரிவிக்கவும் ஷர்மிளா கெடு விதித்திருந்தார். ஆனாலும் நட்டாற்றில் கைவிட்டுவிட்டது காங்கிரஸ். இதனால் வருத்தம் அடைந்த ஷர்மிளா, இப்போது தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

119 தொகுதிகளில் தனித்து போட்டி: இதையடுத்து தெலுங்கானாவின் 119 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் ஷர்மிளா. மேலும் காங்கிரஸ் கட்சிக்காக 4 மாதங்கள் காத்திருந்தோம். காங்கிரஸ் எங்களை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் தற்போதைய ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் சிதறிப் போனால் எங்களை யாரும் விமர்சிக்கவும் கூடாது. நான் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன். என் கணவர் அனில் குமார், அம்மா விஜயம்மா ஆகியோரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது கட்சி தொண்டர்களின் விருப்பம் என்றார் ஷர்மிளா.













Click it and Unblock the Notifications