நாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது
Recommended Video
ஹைதராபாத்: பிரபல நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது யார் என்பது குறித்து அடையாளம் தெரிந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டத்தில் சாத் நகர் அருகே பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் 40 ஏக்கரில் விளை நிலம் ஒன்றை நடிகர் நாகார்ஜூனா அண்மையில் தான் வாங்கியிருந்தார்.
இந்த விளை நிலத்தை இந்த மாதம் முதல் வாரத்தில் தான் நாகார்ஜூனாவின் மனைவியான நடிகை அமலா பார்வையிட்டு வந்திருந்தார்.

நிபுணர்கள் குழு
அங்கு இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளதா என மண்ணின் தன்மையை அறிவதற்காக நிபுணர் குழுவினை நாகர்ஜூனா குடும்பம் கடந்த புதன்கிழமை அனுப்பி வைத்திருந்தது.

மனித எலும்புக்கூடு
அந்தக் குழு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. எங்கிருந்து வருகிறது என்பதை அறிய தேடிய போது பழைய பொருட்கள் அறையில் துர்நாற்றம் வருவதை அறிந்து அதை அவர்கள் திறந்தனர். அங்கு மனித எலும்புக் கூடு கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணை
அங்கு சென்ற போலீசார் எலும்புக் கூட்டை கைப்பற்றிய விசாரணை நடத்தினர். சுமார் 35 வயது மதிக்கத்தக்கதாகக் கருதப்படும் நபர், 6 மாதத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கருதி விசாரித்தனர்.

தற்கொலை செய்தார்
இந்நிலையில் அங்கு கிடந்த ஆதார் கார்டை வைத்து, அது பாப்பிரெட்டிகுடா கிராமத்தைச் சேர்ந்த சக்காலி பாண்டு (30) என்பவரது உடல் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும் சகோதரரின் இறப்பு காரணமாக வேதனையில் இருந்த அவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோர்கள் கூறினர். ஆனால் எங்கு தற்கொலை செய்தார் என்ற விவரம் தங்களுக்கு தெரியாது என போலீசிடம் அவர்கள் கூறினர். போலீஸில் அவர்கள் ஏன் புகார் அளிக்கவில்லை என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications