மாணவிகளுக்கு தொல்லை.. டீச்சரை ஓட ஓட விரட்டி செருப்பால் அடித்த பொதுமக்கள்.. "சம்பவம்"
ஹைதராபாத்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரத்தம் வழிய வழிய பொதுமக்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை தான் சரி என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவிகளை மிரட்டி இந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
மதுரையில் யோகா டீச்சரை கொன்று வீட்டுக்குள் புதைத்த வக்கீல்.. தற்கொலை.. 10 பக்கத்தில் பரபர கடிதம்

மாணவியிடம் ஆபாச பேச்சு
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் அரசு உதவிப்பெறும் மகளிர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் உயிரியல் ஆசிரியாக பணிபுரிபவர் ரமணா (47). இவர் சமீபத்தில் அப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, அந்த மாணவியிடம் மிகவும் ஆபாசமாக ரமணா பேசியதாக தெரிகிறது. மேலும், தனது வீட்டுக்கு தனியாக வருமாறும் அந்த மாணவியை ரமணா அழைத்திருக்கிறார். இதனால் பயந்துபோன அந்த மாணவி, அழைப்பை துண்டித்திருக்கிறார்.

"ஃபெயில் ஆக்கிவிடுவேன்"
தனது பேச்சை மாணவி கேட்காததால் கோபமடைந்த ஆசிரியர் ரமணா, கடந்த சில மாதங்களாக அந்த மாணவியை டார்ச்சர் செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், தனியாக அழைத்து அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஃபெயில் ஆக்கிவிடுவேன் எனவும் அவர் மிரட்டியிருக்கிறார். ஒருகட்டத்தில், ஆசிரியரின் தொடர் தொல்லையால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, பள்ளிக்கு இனி செல்ல மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, அவரிடம் பெற்றோர் விசாரித்த போதுதான் ஆசிரியரின் இந்த பாலியல் தொல்லை பற்றி மாணவி கூறியிருக்கிறார்.

ஜாலியாக வந்த ஆசிரியர்
இதனைத் தொடர்ந்து, சக மாணவிகளிடம் அந்த மாணவியின் பெற்றோர் விசாரிக்கையில், அவர்களுக்கும் ஆசிரியர் ரமணா பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி நிர்வாகத்திடம் எதுவும் தெரிவிக்காமல் அங்கு கும்பலாக சென்றிருக்கின்றனர். அப்போது, தனக்காக தான் இந்தக் கூட்டம் கூடியிருக்கிறது என்று தெரியாமல், பொதுமக்களை பார்த்தபடியே ஜாலியாக சென்று பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியுள்ளார் ரமணா.

விரட்டி விரட்டி செருப்படி - போக்சோ
அவர் வண்டியை விட்டதுதான் தாமதம்.. அடுத்த நொடி அடைமழை வெளுத்து வாங்குவது போல பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு அவரை சரமாரியாக தாக்கினர். எதற்கு தன்னை அடிக்கிறார்கள் என்று தெரியவருவதற்குள்ளாக அவர் முகத்தில் ரத்தம் கொட்ட தொடங்கியது. ஆனாலும் விடாத பொதுமக்கள், அவரை சாலையில் விரட்டி விரட்டி செருப்பால் அடித்தனர். பலமான அடியால் சட்டையெல்லாம் கிழிந்து, வெறும் முண்டா பனியனுடன் ஓடிச்சென்ற அவரை போலீஸார் வந்து மீட்டனர். பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் ஆசிரியர் ரமணா மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பெற்றோரிடம் செருப்படி வாங்கிய ஆசிரியரின் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.