10 நாட்களுக்கு ரூ.54 லட்சம்.. சொகுசு கப்பல் இல்லீங்க.. மருத்துவமனை பில்தான் இது.. ஷாக்கான நோயாளி!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் 10 நாட்கள் சிகிச்சைக்கு சுமார் ரூ.54 லட்சம் பில் செலுத்த வேண்டும் என்று நோயாளியை தனியார் மருத்துவமனை வலியுறுத்தியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சையத் ரஹ்மத் உதின். 44 வயதான இவருக்கு கார்டியோஜெனிக் அதிர்ச்சி மற்றும் இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாத தொடக்கத்தில் அவர் பிரபல தனியார் மருத்துவமனையான 'சிட்டிசன் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் மருத்துவமனை பில்லை கட்ட சொல்லியுள்ளது.
பில்லை பார்த்த சையத் ரஹ்மத் உதினின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது சையத் ரஹ்மத் உதின் மருத்துவமனையில் சேர்ந்து வெறும் 10 நாட்கள்தான் ஆகிறது. ஆனால் இந்த சிகிச்சைக்கு சுமார் ரூ.54 லட்சத்தை கட்டுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனை எதிர்பார்க்காத குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்போது வரை ரூ.20 லட்சத்தை குடும்பத்தினர் கட்டியுள்ளனர். ஆனால் மேற்கொண்டு தொகையை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.

பில்
மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் கட்சியின் (எம்பிடி) செய்தித் தொடர்பாளர் அம்ஜத் உல்லா கான் இந்த சம்பவம் குறித்த தகவல்களையும், மருத்துவமனையின் பில்லையும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது. பில்லின்படி, ஆலோசனைக்காக ரூ.50,000, ஐசியூ மற்றும் அறைகளுக்கு ரூ.3,00,000, ஆஞ்சியோபிளாஸ்டிக் கட்டணமாக ரூ.4,00,000, மருந்துகள் மற்றும் டிஸ்போசபிள்களுக்கு ரூ.11,00,000, விசாரணைக்கு ரூ.3,50,000, மற்ற மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5,00,00 என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எக்ஸ்ட்ரா கார்போரல் மெம்ப்ரேன் ஆக்சிஜனேற்றத்திற்கு ரூ. 18,00,000 மற்றும் CRRT இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கு ரூ.9,00,000 என மொத்தமாக 10 நாட்களுக்கு ரூ.54 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டணம்
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனையின் நிர்வாகத்திடம் தனியார் செய்தி ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டது கேட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த நிர்வாகம், "ஆன்லைனில் விநியோகிக்கப்படும் பில் நோயாளிக்கு சிகிச்சைக்காக நிதி திரட்டுவதற்காக வழங்கப்பட்டது" என்று கூறியுள்ளார். மேலும் சில தகவல்களை கேட்டபோது பதிலளிக்காமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையின் பில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த பில்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு உரிய கண்டனங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தனியார் மருத்துவமனை
தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் இதேபோல பல மருத்துவமனைகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளன. தற்போதும் இந்த கட்டண கொள்ளை தொடர்ந்து வருகிறது. இதற்கு முடிவு கட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு என அரசு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் இந்த கட்டண கொள்ளை அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சலசலப்பு
ஹைதராபாத் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த கட்டண கொள்ளை குறித்து அரசு தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. வெறும் 10 நாட்கள் சிகிச்சைக்கு ரூ.54 லட்சத்தை கட்டணமாக செலுத்தக்கோரி தனியார் மருத்துவமனை ஒன்று வலியுறுத்தியுள்ளது அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications