கண்கலங்கிய முன்னாள் காதலி.. காதல் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மனைவி.. ஆந்திராவில் ஆச்சரியம்
ஐதராபாத்: ஆந்திராவில் மனைவி ஒருவர் தனது கணவருக்கு முன்னாள் காதலியுடன் 2வது திருமணம் செய்து வைத்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக ஒரு பெண்ணோ, ஆணோ தனது கணவர்/மனைவி ஆகியோர் இன்னொருவருடன் நெருக்கமாக பழகுவதை விரும்பமாட்டார். இதில் சிலர் ஒருபடி மேலே சென்று கணவர்-மனைவியின் செயல்களை கண்காணிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்னர்.
இந்நிலையில் தான் ஆந்திராவில் ஒரு பெண் தனது கணவரை முன்னாள் காதலியுடன் சேர்த்து வைத்து 2வது திருமணம் நடத்தி உள்ள விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

டிக்டாக் பிரபலம்
ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்வர் கல்யாண். பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானார். இளைஞராக உள்ள இவுர் காதல் தொடர்பான நடிப்புக்கு ஏராளமான ரசிகர், ரசிகைகள் இருந்தனர். இந்நிலையில் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்பவர் கல்யாணுக்கு பழக்கமானார்.

காதல் திருமணம்
இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்து காதலை வளர்த்தனர். மேலும் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து தற்போது பாடலுக்கு நடனமாடி யூடியூப்பில் பதிவேற்றி வருகின்றனர்.

மனைவியை சந்தித்த முன்னாள் காதலி
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்பவர் அம்பேத்கர் நகருக்கு வந்தார். அவர் விமலாவை தனியாக சந்தித்து பேசினா். அப்போது அவர், ‛‛நானும் கல்யாணும் டிக்டாக்கில் ஒன்றாக வீடியோ வெளியிட்டு வந்தோம். இருவரும் காதலித்தோம். சிறு கருத்துவேறுபாட்டால் பிரிந்துவிட்டோம். நான் அவரை தேடியும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சேர்த்து வைக்ககோரி கண்ணீர்
இந்நிலையில் தான் தொடர்ந்து விசாரித்ததில் அவருக்கு திருமணமாகி இருந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். மேலும் உங்களின் வாழ்க்கையில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. கல்யாணை என்னால் மறக்கமுடியவில்லை. இதனால் தான் தேடி வந்துவிட்டேன். எங்களை சேர்த்து வையுங்கள்'' எனக்கூறி கண்கலங்கி உள்ளார்.

கணவரிடம் பேசிய மனைவி
இதைக்கேட்ட விமலா அவரை சமாதானம் பேசி அனுப்பினார். அதோடு இந்த விஷயத்தை விமலா தனது கணவரான கல்யாணிடம் கூறாமல் இருந்தார். அதோடு விமலா தனது இயல்பான நிலையை மறந்து சோகமாக காணப்பட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கல்யாண் சோகத்தின் பின்னணி பற்றி தெரிவிக்கும்படி கேட்டுள்ளார். அப்போது தான் விமலா, முன்னாள் காதலி நித்யஸ்ரீ தன்னை சந்தித்தது பற்றி தெரிவித்தார். இதைக்கேட்டு கல்யாணும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி விமலா விசாரித்தபோது நித்யஸ்ரீ கூறியது உண்மை என அவர் கூறினார்.

கணவருக்கு 2வது திருமணம்
இதை கேட்ட விமலா வினோத முடிவுக்கு வந்தார். அதன்படி தனது கணவரான கல்யாணுக்கு முன்னாள் காதலியான நித்யஸ்ரீயுடன் 2வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதுபற்றி நித்யஸ்ரீ, கல்யாண் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தனது கணவரின் 2வது திருமண ஏற்பாட்டை விமலா முன்னின்று செய்த நிலையில் கல்யாணுக்கும்-நித்யஸ்ரீக்கும் 2வது திருமணம் செய்து வைத்தார். கோவிலில் நடந்த திருமணத்தில் கல்யாண், நித்யஸ்ரீயின் கழுத்தில் தாலி கட்டி அவரை 2வது மனைவியாக ஏற்றுக்கொண்டார். மேலும் மூவரும் சேர்ந்து செல்போனில் போட்டோக்கள் எடுத்து கொண்டனர். இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications