திருப்பதி கோயிலில் ரீல்ஸ்க்காக சேட்டை! டிடிஎஃப் வாசன் மீது பாயும் ஆக்சன்! தேவஸ்தானம் எடுத்த முடிவு
திருப்பதி: பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பிராங்க் என்ற பெயரில் பொது இடங்களில் யூடியூபர்கள் செய்யும் செயல்கள் சில சமயங்களில் பொதுமக்கள் இடையே சலிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிடும். வியூவ்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஜாலியாக வீடியோ எடுத்தாலும், அது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.

பிராங்க் வீடியோ: அப்படித்தான், யூடியூபர் டிடிஎஃப் வாசன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு செல்லும் வழியில் உள்ள கேட்டை மூடுவது போல் பிராங்க் செய்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய பக்தர்கள் வேகமாக உள்ளே செல்கின்றனர். பின்னர் அவர்களிடம் இது பிராங்க் தான் என்று சொல்கின்றனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை: திருப்பதி கோயிலில் சாமி தரிசனத்திற்கு மணிக்கணக்கில் நேரம் எடுக்கும். கால் வலிக்க நின்று, வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் நேரம் கிடைக்கும் போது சற்று அமர்ந்திருப்பார்கள். இப்படி இருக்கையில் அவர்களை ஏமாற்றுவது தவறு என நெட்டிசன்கள் பலரும் டிடிஎஃப் வாசனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது திருப்பதி தேவஸ்தானமும் டிடிஎஃப் வாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்வதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
டிடிஎஃப் வாசன்: நண்பர்களுடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்ற டிடிஎஃப் வாசன் பக்தர்கள் காத்திருந்த பகுதியின் கேட்டை திறந்து விடுவதை போல பிராங்க் செய்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் விபத்தில் சிக்கினார்.
7 பிரிவுகளில் வழக்கு: சாலையில் வீலிங் செய்ய முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் சில நாட்களில் ஜாமீன் பெற்ற அவர் மீண்டும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட தொடங்கினார்.
குறிப்பாக சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்ற வாசன், காரை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வாசன் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த மே 30ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கிலும் தற்போது வாசனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications