ஒரே நேரத்தில் குவிந்த விமானங்கள்.. ஹைதராபாத் வானில் டிராபிக் ஜாம்.. உடனே விமானி எடுத்த மேஜர் முடிவு!
ஹைதராபாத்: நாம் சாலைகளில் டிராபிக் நெரிசல் ஏற்பட்டுக் கேட்டிருப்போம். நாமே கூட டிராபிக் பிரச்சினையில் சிக்கி அவதிப்பட்டு இருப்போம். ஆனால், இங்கு ஹைதராபாத்தில் நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில் வானத்தில் டிராபிக் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. திடீரென வானத்தில் டிராபிக் பாதிப்பு ஏற்பட்டதால் பைலட் அடுத்து என்ன செய்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த ஜூன் மாதம் இந்திய ஏவியேஷன் துறைக்குக் கருப்பு மாதம் என்றே சொல்லலாம். கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் உள்ளே இருந்தவர்களில் ஒருவரைத் தவிர அனைவருமே உயிரிழந்தார். இந்ச் சம்பவத்தைத் தொடர்ந்து விமானத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் திருப்பிவிடப்படுவது, ரத்து செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

திருப்பிவிடப்பட்ட விமானம்
இதற்கிடையே ஹைதராபாத்திற்கு வந்த விமானம் ஒன்றும் வேறு ஒரு விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விமானத்தில் தொழில்நுட்ப சிக்கலோ அல்லது எரிபொருள் சார்ந்த குறைபாடு எதுவும் ஏற்படவில்லை. அப்படியிருந்தால் ஏன் திடீரென விமானத்தை திருப்பி விட்டனர் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஹைதராபாத்தில் ஏர்போர்ட் அருகே வானத்தில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுவிட்டதாம். இதன் காரணமாகவே அந்த விமானத்தைத் திருப்பிவிட்டுள்ளனர்.
வானத்தில் டிராபிக் ஜாம்
அதாவது ஹைதராபாத்தில் ஏர்போர்ட் அருகே விமானப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இன்று காலை புனேவிலிருந்து வந்த இண்டிகோ விமானம் விஜயவாடாவுக்குத் திருப்பி விடப்பட்டது. விமானம் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் விஜயவாடாவில் தரையிறங்கியது என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
புனே விமான நிலையத்திலிருந்து காலை 8:43 மணிக்கு புறப்பட்ட 6E 6473 என்ற இண்டிகோ விமானம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விஜயவாடாவுக்குத் திருப்பி விடப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
விஜயவாடா
ஹைதராபாத் ஏர்போர்ட் அருகே விமானப் போக்குவரத்தில் நெரிசல் அதிகமாக இருந்ததால் விமானத்தை விஜயவாடாவிற்கு திருப்ப விமானி முடிவு செய்தார். நிலைமை சீரானதும் விமானம் விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் நோக்கிப் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் இதுவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை.
வழக்கமாகச் சாலைகளில் தான் டிராபிக் ஆகும். ஆனால், இப்போது வானத்திலும் கூட டிராபிக் ஆகும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மேலும், சல நெட்டிசன்கள் வானத்தில் ஏற்பட்ட இந்த டிராபிக் குறித்து ஜாலியாகவும் சில கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
முன்னெச்சரிக்கை சம்பவங்கள்
அதேபோல கொல்கத்தாவிலிருந்து சென்ற மற்றொரு இண்டிகோ விமானம் (6E 6152) ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் முன்பக்க டயர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விமானி இந்த நடவடிக்கையை எடுத்தார். டயர் பஞ்சர் ஆனதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால், விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், "விமானத்தில் பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. விமானி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை நிறுத்திப் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டார்" என்று தெரிவித்தனர்.
விமானம் ராஞ்சியிலிருந்து பாட்னா மற்றும் லக்னோவிற்கு செல்லவிருந்தது. ஆனால், அந்தப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. பாட்னா செல்ல வேண்டிய பயணிகள் டாக்ஸி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். லக்னோ செல்ல வேண்டிய பயணிகள் மற்றொரு இணைப்பு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக இருந்தனர்.












Click it and Unblock the Notifications