10 எம்எல்ஏக்கள் ரகசிய மீட்டிங்.. தெலுங்கானா காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்? கலங்கி நிற்கும் முதல்வர்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் அந்த கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பண்ணை வீட்டில் ரகசிய மீட்டிங் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து முதல்வர் ரேவந்த் ரெட்டி அவசர மீட்டிங்கிற்கு முடிவு செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கானாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியாக இருந்த பிஆர்எஸை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி முதல்வராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போது தெலுங்கானாவில் பேசும் பொருளாகி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் தனியாக ரகசிய மீட்டிங் நடத்தி உள்ளனர். இந்த மீட்டிங் என்பது ஹைதராபாத்தில் காந்திபேட்டையில் காங்கிரஸ் எம்எல்ஏ அனிருத் ரெட்டிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மீட்டிங் நடந்துள்ளது. இந்த மீட்டிங்கில் காங்கிரஸ் கட்சியின் நயினி ராஜேந்தர் ரெட்டி, பூபதி ரெட்டி, எனாம் சீனிவாச ரெட்டி, முரளி நாயக், கச்சகுல்லா ராஜேஷ் ரெட்டி, சஞ்சீவ் ரெட்டி, அனிருத் ரெட்டி, லட்சுமி காந்த் ராவ், தோன்டி மாதவ ரெட்டி, பீர்லா இலையா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மீட்டிங்கிற்கு முக்கிய காரணம் தெலுங்கானா அரசில் உள்ள தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பொங்குலெட்டி சீனிவாஸ் ரெட்டி தான். இவரது செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனியாக மீட்டிங் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் எம்எல்சி (தெலுங்கானா மேல்சபை) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் ரகசிய மீட்டிங் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் ரகசிய மீட்டிங் பற்றி நாகர்குர்னூல் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்பி மல்லு ரவி கூறுகையில், ‛இது ஒரு டின்னர் மீட்டிங். எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரபப்புகின்றன. அதோடு இந்த மீட்டிங் என்பது பண்ணை வீட்டில் நடக்கவில்லை. ஐடிசி கோஹினூரியில் நடந்துள்ளது. பிரச்சனை ஒன்றை தீர்க்க அமைச்சர் ஒருவரின் உதவி வேண்டும் என்று ஒரு எம்எல்ஏ நினைத்துள்ளார். இதுபற்றி அவர் பிற எம்எல்ஏக்களிடம் பேசினார். அந்த எம்எல்ஏக்களும் பிரச்சனையை தீர்க்க அமைச்சரை கூட்டாக சந்திப்போம் என்று கூறி உறுதியளித்துள்ளனர்'' என்றார்.
இருப்பினும் இந்த ரகசிய மீட்டிங் என்பது முதல்வர் ரேவந்த் ரெட்டியை கலங்க வைத்துள்ளது. அமைச்சர் பொங்குலெட்டி சீனிவாஸ் ரெட்டிக்கு எதிரான அதிருப்தியை சரிசெய்ய முதல்வர் ரேவந்த் ரெட்டி அவசர மீட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் பொங்குலெட்டி சீனிவாஸ் ரெட்டி தனது பாலைர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்த மீட்டிங்கில் எம்எல்ஏக்களின் அனைத்து கோரிக்கைகளையும் அமைச்சர்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் இந்த 10 எம்எல்ஏக்களின் ரகசிய மீட்டிங் விஷயத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி சாதாரணமாக எடுக்கவில்லை. சீரியஸாக எடுத்துள்ளார். ரேவந்த் ரெட்டி அவசர மீட்டிங் நடத்த தயாராவதில் இருந்தே 10 எம்எல்ஏக்களின் ரகசிய மீட்டிங் விவகாரத்தை அவர் புறம்தள்ளிவிட்டு கடந்து செல்லவில்லை என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம். இதன் பின்னணியிலும் முக்கிய விஷயம் உள்ளது.
அதாவது தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது வேண்டும். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டியை விட 4 இடங்கள் மட்டுமே கூடுதலாக கைப்பற்றியது. இப்போது 10 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி கட்சி மாறினால் அது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியையே கவிழ்த்து விடும்.
அதேபோல் இந்த 10 எம்எல்ஏக்களும் எதிர்க்கட்சியாக உள்ள பிஆர்எஸ் கட்சியுடன் இணையலாம். ஏற்கனவே முன்னாள் முதல்வர் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சிக்கு 39 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் 10 பேர் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 49 என்று உயரும்.
இன்னும் பெரும்பான்மைக்கு 11 எம்எல்ஏக்கள் தேவைப்படும் சூழலில் பாஜகவிடம் 8 எம்எல்ஏக்கள், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியிடம் 7 எம்எல்ஏக்கள் உள்ளன. இவர்களும் பிஆர்எஸ் கட்சியுடன் கைகோர்த்தால் மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு கூட வழி இருக்கு. இப்படியான கூட்டணி அமைவது சிரமம் என்றாலும் கூட அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தான் ரேவந்த் ரெட்டி உடனடியாக சுதாரித்து அவசர மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தெலுங்கானாவில் திடீரென்று 10 எம்எல்ஏக்கள் ரகசிய மீட்டிங் நடத்தி இருப்பது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications