"கர்நாடக பார்முலா.." நேரடியாக "அவரையே" இறக்கும் தலைமை.. தெலங்கானாவுக்கு காங்கிரஸ் மாஸ்டர் ஸ்கெட்ச்
ஹைதராபாத்: தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இதில் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காகப் பல மேஜர் நடவடிக்கைகளை இப்போது ஆரம்பித்துவிட்டது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி அக்கட்சி தொண்டர்களுக்கு மட்டுமின்றி தலைவர்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்து வரும் தேர்தல்களை உற்சாகத்துடன் எதிர்கொள்ளக் காங்கிரஸ் ரெடியாகி வருகிறது.

அதன்படி அடுத்து அவர்களின் இலக்காக தெலங்கானா சட்டசபைத் தேர்தல் இருக்கிறது. ராகுல் காந்தி சமீபத்தில் அங்கே கலந்து கொண்ட கூட்டத்திற்கு மிகப் பெரிய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருந்த நிலையில், அதை வாக்குகளாக மாற்றும் முடியும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது.
தெலங்கானா: ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போது, காங்கிரஸ் அங்கே ஆதிக்கம் செலுத்தி வந்தது. இருப்பினும், ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்குப் பிறகு அங்கு நடந்த பல சம்பவங்களால் காங்கிரஸ் அங்கு பலத்தை இழந்தது. ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் பலத்தை இழந்தது. இதற்கிடையே தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே கம்பேக் கொடுப்பதில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கிறது.
தெலுங்கானாவில் கேசிஆர் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதியின் முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்பி பொங்குலேடி சீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் கேசிஆர் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் இணைந்தனர். இதுவே தெலங்கானாவில் காங்கிரசுக்குக் கிடைத்த முதல் பாசிட்டிவ் நியூசாக இருக்கிறது. மறுபுறம் தெலங்கானா பாஜகவிலும் உட்கட்சி மோதல் இருக்கிறது. இதுவும் கூட காங்கிரஸ் கட்சிக்கு பாசிட்டிவாக மாறியுள்ளது.
முக்கிய தலைவர்கள்: கிருஷ்ணாராவ் மற்றும் சீனிவாச ரெட்டி இருவரும் தெலங்கானாவின் கம்மம் மற்றும் மஹ்பூப்நகர் பகுதிகளில் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அவர்களின் வருகை பலம் சேர்க்கும். இதில் கிருஷ்ணா ராவு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர்.
சீனிவாச ரெட்டி 2014 இல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் மக்களவைக்குத் தேர்வானார். ஆனால் அவர் கேசிஆர் கட்சிக்குத் தாவியிருந்தார். இவர்கள் மட்டுமின்றி, ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த குருநாத் ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ மற்றும் ஜில்லா பரிஷத் தலைவர் கோரம் கனகையா, முன்னாள் எம்எல்ஏ பயம் வெங்கடேஸ்வரலு, மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி (டிசிசிபி) முன்னாள் தலைவர் எம். விஜயா பேபி மற்றும் தற்போதைய டி.சி.சி.பி. தலைவர் துல்லூரி பிரம்மையா ஆகியோரும் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தெலங்கானாவில் கேசிஆர் ஆட்சியே நடந்து வரும் நிலையில், அங்கே மக்கள் அத்திருப்தியில் உள்ளதாகவும் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். மேலும், தேர்தல் நெருங்க நெருங்க மாற்றுக் கட்சியில் இருந்து மேலும் பல தலைவர்கள் காங்கிரஸில் ஐக்கியமாவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
களநிலவரம்: தெலங்கானா மக்களின் கோரிக்கையை ஏற்று 2014இல் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனியாகப் பிரித்தது அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி தான். இருப்பினும், அதை வாக்காளர்களிடம் சென்று சேர்ப்பதில் காங்கிரஸ் சொதப்பிவிட்டது. இந்த கிரெடிட் எல்லாம் கேசிஆருக்கு செல்ல அதை வைத்தே மிகப் பெரும் தலைவராக உருவெடுத்துவிட்டார். இதை வைத்தே முதலில் ஆட்சியை அமைத்தார். அதன் பின்னர் செய்த வளர்ச்சி பணிகள், தெலங்கானா முழக்கம் உள்ளிட்டவற்றை வைத்து 2018ஆம் ஆண்டிலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.
கடந்த ஜூன் 27ஆம் தேதி தெலங்கானா தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கர்நாடக தேர்தலில் பயன்படுத்திய செயல் திட்டத்தை தெலங்கானாவிலும் பயன்படுத்த முடிவு செய்தனர். அனைவருக்கும் மிக எளிதாகச் சென்று சேரும் வகையில் 5 எளிமையான தேர்தல் வாக்குறுதிகளையும் அவர்கள் ரெடி செய்ய முடிவு செய்துள்ளனர்.
பக்கா பிளான்: தெலங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் இருக்கும் நிலையில், 50% தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஓரிரு மாதத்தில் அறிவிக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அந்த வேட்பாளர்களை இப்போதில் இருந்தே களத்தில் இறங்கி வேலை செய்யவும் காங்கிரஸ் உத்தரவிட உள்ளது.
இந்தத் தேர்தலில் யாருக்கு எல்லாம் போட்டியிட சீட் வழங்கப்படும் என்பதில் கட்சித் தலைமை இறுதி முடிவு எடுக்கும் என்று ராகுல் காந்தியே கூறிவிட்டார். அதாவது கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெல்ல முக்கிய காரணமாக இருந்த தேர்தல் ஆலோசகர் சுனில் ஆலோசனைக்குப் பின்னரே வேட்பாளர்கள் டிக் அடிக்கப்படுவார்கள்.
தெலுங்கானாவில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியுடன் காங்கிரஸ் இந்த முறை இறங்கி இருக்கிறது. அரசுக்கு எதிரான மனநிலை, கேசிஆர் குடும்ப கட்சி விமர்சனம் எனப் பல விஷயங்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. கர்நாடக பார்முலாவை பயன்படுத்தி காங்கிரஸ் தெலங்கானாவையும் தன்வசப்படுத்துமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications