பவன் கல்யாண் பற்றி புத்தகம் எழுதிய பிரபல எழுத்தாளர்.. காரில் இருந்த கோலம்.. ஆடிப்போன ஆந்திரா
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் நந்தியால மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் பிரபல எழுத்தாளர் மற்றும் யூடியூபர் ஆவார். இவர் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணை விமர்சித்து புத்தகம் எழுதி இருந்தார்.இந்த புத்தகம் 8.4 லட்சம் பிரதிகள் விற்பனையாகியும் இருந்தது. இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் ஹைதராபாத்தில் இருந்து கம்மம் செல்லும் வழியில் காருக்குள் இருந்த கோலம் மொத்த ஆந்திராவையும் ஆடிப்போக வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் நந்தியால மாவட்டத்தைச் சேர்ந்த அல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 48 வயதாகும் ஸ்ரீநிவாஸ், பிரபல எழுத்தாளர் ஆவார். இவர் யூடியூபராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணை விமர்சித்து புத்தகம் எழுதியிருந்தார். இந்த புத்தகம் 8.4 லட்சம் பிரதிகள் விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

என்ன நடந்தது
இதற்கிடையே ஸ்ரீநிவாஸ் ஹைதராபாத்தில் இருந்து கம்மம் என்ற பகுதிக்கு காரில் பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்த கார் கம்மம் மாவட்டம் கூசுமஞ்சி மண்டலத்தில் உள்ள பாலேறு நீர்த்தேக்கத்தின் பாதுகாப்புச் சுவரில் மோதி ஏரிக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்து சனிக்கிழமை அன்று பழைய கம்மம்-சூர்யாபேட்டை சாலையில் நடந்திருக்கிறது.
காணாமல் போன டிரைவர்
இந்த மரணம் விபத்து என்று கூறப்பட்டாலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஏனெனில் விபத்து என்றால் அந்த காரை ஓட்டிய டிரைவர் எங்கே.. கார் ஏரிக்குள் விழுந்தபோது, அதனை ஓட்டிய டிரைவர் மட்டும் காரிலிருந்து குதித்துத் தப்பிச் சென்றுள்ளார். விபத்து நடந்த பிறகு அவர் அங்கிருந்து தலைமறைவானது பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
காயம் இருந்தது
கார் மீட்கப்பட்டபோது ஸ்ரீநிவாஸ் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். குளத்தில் விழுந்தவருக்கு தலை மற்றும் உடலில் சில காயங்கள் இருந்ததாகக் கூறப்படுவதும் விமர்சனங்களும் சந்தேகங்களும் அதிகரிக்க காரணமாகி உள்ளது.
குடும்பத்தினரின் புகார்
ஸ்ரீநிவாஸின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் இது தற்செயலான விபத்து அல்ல, திட்டமிடப்பட்ட கொலை என்று புகார் அளித்திருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவன் கல்யாண் குறித்து புத்தகம்
2014-ஆம் ஆண்டு அவர் எழுதிய "பவன் கல்யாண் ஹட்டாவோ - பாலிடிக்ஸ் பச்சாவோ" (Pawan Kalyan Hatao - Politics Bachao) என்ற புத்தகம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அதற்காக அவருக்கு அப்போதே கொலை மிரட்டல்களும் வந்ததாக சொல்லப்படுகிறது. போலீசார் இந்தச் சம்பவத்தை "மர்ம மரணம்" என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய டிரைவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் ஸ்ரீநிவாஸின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் என்ற முறையில், ஒரு மர்ம மரணம் குறித்த வழக்கில் விசாரணை முடிவதற்கு முன்னரோ அல்லது காவல்துறை அறிக்கை வருவதற்கு முன்னரோ பவன் கல்யாண் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது போலீசார் தப்பியோடிய டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் மட்டுமே இந்த மரணத்தின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சதி உள்ளதா அல்லது இது வெறும் விபத்தா என்பது குறித்த தெளிவான தகவல் வெளிவரும்.












Click it and Unblock the Notifications