"சாமானியர் டூ சாதனை தலைவர்.." தெலுங்கானா அரசியலை மொத்தமாக புரட்டி போட்டவர் கேசிஆர்.. யார் இவர்
ஹைதராபாத்: இன்னும் சில நாட்களில் தெலுங்கானா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் தற்போது முதல்வராக இருக்கும் கேசிஆர் தெலுங்கானா அரசியலில் ஏன் முக்கியமானவர் என்பது குறித்துப் பார்க்கலாம்.
தெலுங்கானாவில் இருந்து கொண்டு தேசிய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இந்த கேசிஆர். யார் இவர்.. இவரது வியூகங்கள் கடந்த காலங்களில் பிஆர்எஸ் கட்சிக்கு எந்தளவுக்குப் பலன் கொடுத்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாகக் காரணமாக இருந்தவர். இரு தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறக் காரணமாக இருந்தவர் கேசிஆர். இவரது முழு பெயர் கல்வகுந்த்லா சந்திரசேகர் ராவ்..
கேசிஆர்: நாட்டில் இருக்கும் பெரும்பாலான பிராந்திய கட்சித் தலைவர்களைப் போலவே கேசிஆரும் தனது அரசியல் வாழ்க்கையைக் காங்கிரஸ் கட்சியில் இருந்தே தொடங்கினார். சந்திரசேகர் ராவ் கடந்த 1983இல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைவதற்கு முன்பு இளைஞர் காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய இடத்திற்கு வந்த இவர், தெலுங்கானா பிராந்தியத்திற்கு சந்திரபாபு நாயுடு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி 2001இல் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர் அவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை உருவாக்கினார். 1960களில் தெலுங்கானாவுக்குத் தனி மாநிலம் என்ற கோரிக்கை இருந்தது. பல ஆண்டுகளாக அந்த கோரிக்கையை யாரும் எழுப்பாத நிலையில், மீண்டும் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை எழுப்பினார் கேசிஆர். தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை ஏற்பதாகக் காங்கிரஸ் வாக்குறுதி அளித்த நிலையில், கடந்த 2004 லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கை கோர்த்தார் கேசிஆர்.
உண்ணாவிரதம்: இருப்பினும், தெலுங்கானாவை உருவாக்குவதில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினார். பிறகு தெலுங்கானாவை உருவாக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக சந்திரபாபு நாயுடு கூறிய நிலையில், 2009இல் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்தார். தொடர்ந்து கடந்த நவம்பர் 2009இல், தெலுங்கானா தனி மாநில மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்திச் சாகும்வரை உண்ணாவிரதத்தை கேசிஆர் தொடங்கினார்.
அவர் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், தெலுங்கானாவைத் தனி மாநிலமாக உருவாக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இப்படி தொடர்ச்சியாகத் தெலுங்கானாவைத் தனி மாநிலமாகப் பிரிக்க அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 2014 ஆந்திரா தேர்தலில் கேசிஆர் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ந்து தெலுங்கானா புதிய மாநிலமாகப் பிறந்த போது கேசிஆரிடம் 11 எம்பிக்களும், 63 எம்எல்ஏக்களும் இருந்தனர்.
வாஸ்துவில் ஓவர் நம்பிக்கை: தெலுங்கானா தனி மாநிலமாகப் பிறந்த நிலையில், கடந்த 2014 ஜூன் 2ஆம் தேதி மதியம் 12.57 மணிக்கு அவர் முதல்வராகப் பதவியேற்றார். அது ஏன் சரியாக 12.57 என்று கேள்வி வரலாம். ஜோதிடம், எண் கணிதம் மற்றும் வாஸ்து ஆகியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்டவர் கேசிஆர். இதன் காரணமாகவே அவர் சரியாக 12.57க்கு பதவியேற்றார். அவரது அதிஷ்ட எண் 6 என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கானா மக்களால் மிகவும் மதிக்கப்படும் தலைவராக கேசிஆர் இருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளாகத் தெலுங்கானா முதல்வராக இருக்கும் கேசிஆர், இப்போது மூன்றாவது தேர்தலுக்கு ரெடியாகிறார். இந்த முறை அதே வெற்றியைப் பெற முடியுமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். கடந்த முறை அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் இவரது வியூகத்திற்கு கை மேல் பலன் கிடைத்தது. அதாவது அங்கே 2019 லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல் நடந்திருக்க வேண்டும்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்கூட்டியே 2018இல் சட்டசபையைக் கலைத்து, அத்தனை தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கினார் கேசிஆர். தெலுங்கானாவில் இருந்த அரசியல் கட்சிகள் இதை எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகவே தெலுங்கானாவில் மொத்தம் இருந்த 119 தொகுதிகளில் 88ஐ கைப்பற்றி மெகா வெற்றி பெற்றது பிஆர்எஸ். மீண்டும் இந்த முறை அதே வெற்றியை கேசிஆரால் பெற முடியுமா என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications