விமானத்தில் டென்ஷனான டேவிட் வார்னர்.. பதறியடித்து மன்னிப்பு கோரிய ஏர் இந்தியா.. என்ன நடந்தது?
ஹைதரபாத்: எவ்வளவு நேரம் தான் விமானத்தில் இப்படியே இருக்கிறது? என்று ஏர் இந்தியா நிறுவனத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனால் பதறிப்போன ஏர் இந்தியா நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. டேவிட் வார்னரின் இந்த கோபத்துக்கு என்ன காரணம்? ஏர் இந்தியா விமானத்தில் என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர். இவருக்கு நம் நாட்டில அதிக ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்கு இவர் விளையாடினார். தற்போது தொடங்கி உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னரை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இதனால் அவர் ஏமாற்றமடைந்தார். இதற்கிடையே தான் டேவிட் வார்னர் புதிய படத்தில் நடித்துள்ளார். அதாவது ‛ராபின் ஹுட்' என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளார்.
இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்கி உள்ளார். படத்தில் நடிகர் நிதின், நடிகை ஸ்ரீலீலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மார்ச் 28 ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக டேவிட் வார்னர் ஐதராபாத் வந்தடைந்தார்.
இந்நிலையில் தான் விமானத்தில் அதிக நேரம் காக்க வைக்கப்பட்டதாக டேவிட் வார்னர் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக டேவிட் வார்னர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நாங்கள் விமானி இல்லாத விமானத்தில் ஏற்றப்பேட்டோம். இதனால் மணிக்கணக்கில் விமானத்தில் காத்திருந்தேன். விமானி இல்லாவிட்டால் எதற்காக விமானத்தில் ஏற்றுகிறீர்கள்? என்று ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதோடு டேவிட் வார்னரிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா சார்பில், ‛‛பெங்களூரில் மோசமான வானிலை நிலவியது. இதனால் விமானம் புறப்பட தாமதாமானது. பல விமானங்கள் இதில் பாதிக்கப்பட்டன. இதனால் தாமதம் ஏற்பட்டது. விமானத்தில் பணியாற்ற வேண்டிய குழுவினர் வேறு விமானத்தில் பணியில் இருந்தனர். இதுவும் தாமதத்திற்கு காரணமாகும். சிரமத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்'' என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications