“துரோகம் பண்ணிட்டீங்க” அண்ணன் ஜெகன் மீது புகார்களை அடுக்கிய ஷர்மிளா.. கப்பென பிடித்த தெலுங்கு தேசம்!
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஷர்மிளா ரெட்டிக்கும் இடையேயான குடும்ப சொத்து பிரச்சனை ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணன் ஜெகன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் ஒய்.எஸ்.ஷர்மிளா.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா. இவர், இந்த ஆண்டு துவக்கத்தில் தனது சகோதரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் ஷர்மிளா. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கடப்பா தொகுதியில் போட்டியிட்டு ஷர்மிளா தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி, ஷர்மிளா இடையேயான சொத்து பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. குடும்ப சொத்துகளை பிரிப்பதில் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்புமே மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
சரஸ்வதி பவர் நிறுவனத்தில், தனக்கும், தன் மனைவி பாரதிக்கும் உள்ள பங்குகளை, ஷர்மிளா சட்டவிரோதமாக அவரது பெயருக்கு மாற்றி உள்ளதாக, அவரது சகோதரரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் கிளையில் ஜெகன் மோகன் முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், குடும்ப சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக மறைந்த தமது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உத்தரவை மீறியதாக குற்றம்சாட்டி, ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி தனது சகோதரரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
செப்டம்பர் 12 ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில், ஷர்மிளா, ஜெகனுக்கும் தனக்கும் இடையேயான கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜெகன் நிறைவேற்றத் தவறியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மறைந்த ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் நான்கு பேரக்குழந்தைகளுக்கும் சொத்துக்களை சமமாகப் பகிர்ந்தளிக்க மறுத்தது குறித்தும் ஷர்மிளா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஷர்மிளா தனது கடிதத்தில், தான் வாழ்நாளில் பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பேரக் குழந்தைகளுக்கு சமமாகப் பங்கிட வேண்டும் என்று அவர்களின் தந்தை வெளிப்படையாக அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார், இதற்கு ஜெகன் முதலில் ஒப்புக்கொண்ட நிலையில், ஆனால் பின்னர் இதனை ஏற்க மறுத்து, சொத்துகளை சமமாக பங்கிடவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி, ஒருதலைப்பட்சமாக, தாங்கள் ஏற்கனவே மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள முயற்சிப்பதாகவும், சர்ச்சையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதாகவும் ஷர்மிளா குற்றம் சாட்டி உள்ளார். ஜெகன் தற்போது சொல்லும் விஷயம் தமது தந்தையின் விருப்பத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ளார் ஷர்மிளா.
பாரதி சிமெண்ட்ஸ், சாக்ஷி மீடியா மற்றும் சரஸ்வதி பவர் போன்ற சொத்துளை பிரிப்பதில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், பாரதி சிமெண்ட்ஸ் மற்றும் சாக்ஷி மீடியாவில் தனது சகோதரர் ஜெகன் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார் என்றும் ஷர்மிளா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள ஷர்மிளா, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தனக்கு உறுதியளிக்கப்பட்ட சரஸ்வதி பவர் நிறுவனத்தின் பங்குகளை இன்னும் மாற்றாமல் இருப்பதாகவும், தமது தாயார் விஜயம்மாவின் முன்னிலையில் செய்யப்பட்ட வாய்மொழி ஒப்பந்தங்களில் இருந்து ஜெகன் பின்வாங்குவதாகவும் ஒய்.எஸ். சர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா ரெட்டி இருவருக்கும் இடையேயான குடும்ப சொத்து பிரச்சனை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு அவல் பொரி சாப்பிடுவதாக மாறியுள்ளது. இந்த சகோதர யுத்தம் காரணமாக ஷர்மிளா எழுதியுள்ள கடிதத்தை "மிகப்பெரிய விஷயம் அம்பலமாகியுள்ளது" எனக் கூறி தெலுங்கு தேசம் கட்சியினர், பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications