ஜெகன் சகோதரி ஷர்மிளா கட்சியை இணைக்கும் விவகாரம்: தெலுங்கானா காங்கிரஸில் பெரும் புயல்!
ஹைதராபாத்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா தெலுங்கானாவில் நடத்தி வரும் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி - ஒய்எஸ்ஆர்டிபி YSRTP- யை காங்கிரஸ் கட்சியில் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் ஒய்எஸ்ஆர்டிபி கட்சியை காங்கிரஸில் இணைத்தாலும் ஷர்மிளா, ஆந்திராவில் அரசியல் செய்யட்டும்; தெலுங்கானாவில் தலையிட கூடாது என அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம், காங்கிரஸ், பாஜக இடையே போட்டி.

ஆந்திராவில் சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டி கோலோச்சுவது போல தெலுங்கானாவில் அதிரடி அரசியலில் களமிறங்கினார் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா. தெலுங்கானாவுக்காக ஒய்எஸ்ஆர்டிபி கட்சியும் தொடங்கினார். ஆந்திரா பாணியில் தெலுங்கானாவில் பாதயாத்திரை, போராட்டம் என பல்வேறு முயற்சிகளை ஷர்மிளா மேற்கொண்ட போதும் அவரால் கட்சியை தொடர்ந்து நடத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதனால் வேறுவழியே இல்லாமல் அப்பாவின் தாய் கட்சியான காங்கிரஸில் ஐக்கியமாவது என முடிவு செய்துவிட்டார். ஷர்மிளாவின் ஒய்எஸ்ஆர்டிபி கட்சியானது காங்கிரஸில் இணைவது தொடர்பாக டெல்லி மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லி மேலிடத்தைப் பொறுத்தவரையில் வந்தவரை லாபம் என்கிற கணக்குடன் இருக்கிறது.
ஆனால் தெலுங்கானா காங்கிரஸில்தான் ஷர்மிளாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், ஷர்மிளா காங்கிரஸ் கட்சிக்கு வருவதை வரவேற்கிறோம். ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என விரும்பியவர் ஷர்மிளாவின் தந்தை ராஜசேகர ரெட்டி. அதேநேரத்தில் ஷர்மிளா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆகையால் அவர் ஆந்திரா மாநில காங்கிரஸில்தான் அரசியல் செய்ய முடியும். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவரே தெலுங்கானாவில் அரசியலில் செய்ய வேண்டும் என எதிர்ப்பை காட்டி இருக்கிறார். அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரியும் ஷர்மிளாவுக்கு கடும் எதிர்ப்பை காட்டி உள்ளார். ஷர்மிளாவின் கட்சியை காங்கிரஸில் சேர்ப்பது பச்சையான அரசியல் சந்தர்ப்பவாதம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார். அப்படியும் ஷர்மிளாவின் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தால் மக்களிடையே கெட்ட பெயர்தான் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார் ரேணுகா சவுத்ரி.
தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியின் கருத்தை காங்கிரஸ் சீனியர்களான கேசி வேணுகோபால், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஆதரிக்கின்றனர். ரேவந்த் ரெட்டியைப் பொறுத்தவரையில தமது அரசியல் இருப்புக்கு ஷர்மிளா ஆபத்தாக வருவாரோ என்கிற அச்சத்தால் எதிர்க்கிறார் என்கின்றனர் பத்திரிகையாளர்கள். அதே நேரத்தில் தெலுங்கானா காங்கிரஸ் விவகாரங்களை கையாளும் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான டிகே சிவகுமார், ஷர்மிளாவின் தெலுங்கானா அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
டெல்லி காங்கிரஸ் மேலிடமும் கூட ஷர்மிளாவின் தெலுங்கானா அரசியல்தான் சரியானதாக இருக்கும். முதல்வர் கேசிஆர் மற்றும் அவரது குடும்ப அரசியலை எதிர்கொள்ள ஷர்மிளா சரியான சாய்ஸ் என்பதாகவே கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மூவருமே ஷர்மிளா, காங்கிரஸில் இணைவதற்கு உடனடியாக ஓகே சொன்னார்கள் என்கின்றன தகவல்கள். டிகேஎஸ் மற்றும் சோனியா குடும்பத்தின் ஆதரவு ஷர்மிளாவுக்கு சாதகமானவைதான். இந்த நிலையில் டெல்லி செல்லும் ஷர்மிளா நாளை காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை நாளை சந்தித்து பேச இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இந்த சுவர் எத்தனை பேரை காவு வாங்குமோ?












Click it and Unblock the Notifications