ஆசிரியரிடம் புகார் கூறியதால் ஆத்திரம்... 9ம் வகுப்பு மாணவரை கம்பியால் அடித்துக் கொன்ற சக மாணவர்கள்
டெல்லி: ஆசிரியரிடம் புகார் கூறியதால் ஆத்திரத்தில் 9ம் வகுப்பு மாணவரை சக மாணவர்களே சேர்ந்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் தெற்குப் பகுதியில் இயங்கி வருகிறது கிருஷ்ணா மாடல் பள்ளி. இங்கு 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சுபம் என்ற மாணவர், தனது சக வகுப்புத் தோழர்கள் இருவர் குறித்து தனது ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இரு மாணவர்களும் ஞாயிறன்று நோட் புக் ஒன்றை வாங்குவது போல் சுபம் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சுபம் இல்லை. சுபம் வீட்டிற்கு வரும் வழியில் காத்திருந்த நண்பர்கள், இரும்பு கம்பியால் பலமாக அச்சிறுவனைத் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த சுபம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். உடனடியாக அங்கிருந்து பேருந்து மூலம் அந்த இருமாணவர்களும் ஹரியானா தப்பிச் சென்றுள்ளனர்.
வெளியில் சென்ற சுபம் வீடு திரும்பாததால், அவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் மறுநாள் அதிகாலை 3 மணியளவில் சுபம் உடல் மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலீசார், ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியில் தப்பிச் சென்ற சிறுவர்களைக் கைது செய்தனர். பின்னர் அச்சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications