'பதற்றம்..' பாகிஸ்தான் பயங்கரவாதி காஷ்மீரில் கைது.. பண்டிகை காலத்தை குறிவைத்து மிக பெரிய சதித்திட்டம்?
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நுழைய முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. எல்லையில் நேற்றிரவு நடைபெற்ற ஆப்ரேஷனில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், மற்றொருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் உயிருடன் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரின் உரி பகுதிக்கு இரண்டு பயங்கரவாதிகள் நேற்றிரவு ஊடுருவ முயன்றனர். இந்த பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை கடக்க முயன்றபோது பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல 19 வயதான மற்றொரு பயங்கரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டார்.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி
பாதுகாப்புப் படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் கூறுகையில், "உயிருடன் பிடிக்கப்பட்ட அந்த பயங்கரவாதி பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். தான் லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர் என்பதை அவரே ஒப்புக் கொண்டார். இரண்டு பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

7 நாட்களில் 7 பயங்கரவாதிகள்
கடந்த ஏழு நாட்களில் மட்டும் காஷ்மீரில் ஊடுருவ முயன்ற ஏழு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவி இல்லாமல் பயங்கரவாதிகளால் இப்படியொரு சிக்கலான நடவடிக்கையைச் செய்ய முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று கூறினார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதி ஒருவரை உயிருடன் பிடித்துள்ளது என்பது இந்திய பாதுகாப்புப் படையின் முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
Recommended Video

என்ன நடந்தது
இந்திய பாதுகாப்புப் படையினர் நேற்று வழக்கம் போல ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ முயல்வதைப் பார்த்துள்ளனர். அதேபோல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 4 வீரர்கள் பேக்ஆப் ஆக இருந்துள்ளனர். இதைக் கண்டதும் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகள் உஷாராகி, மீண்டும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குத் தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நேரத்தைப் பயன்படுத்தி 2 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதி கைது
அதற்குக் கூடுதல் படைகள் அங்குக் குவிக்கப்பட்டதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு நபர் உயிருடன் பிடிக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் உயிருடன் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் பிடிக்கப்பட்ட 19 வயது பயங்கரவாதியிடம் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயங்கர ஆயுதங்கள்
முன்னதாக கடந்த செப். 23ஆம் தேதி காஷ்மீரின் உரி பகுதிக்கு அருகே ராம்பூர் செக்டாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) பகுதியில் இருந்து ஊடுருவிய அவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர் என்பதையும் இந்தியா ராணுவம் உறுதி செய்தது. மேலும், அந்த பயங்கரவாதிகளிடம் இருந்து 5 ஏகே 47 ரகத் துப்பாக்கிகள், 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது

எச்சரிக்கை
இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த சில நாட்களாகவே தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.வரும் பண்டிகை காலத்தில் நாட்டின் முக்கிய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி பல முறை முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications