250 பெண்களை சூறையாடிய அஜ்மீர் பலாத்கார வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை-32 ஆண்டுக்குப் பின் தீர்ப்பு!
அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 250-க்கும் மேற்பட்ட பலாத்காரம் செய்து மிரட்டிய நாட்டையே உலுக்கிய 1992-ம் ஆண்டு வழக்கில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி உட்பட 6 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. இந்தியாவையே அதிரச் செய்த இந்த கொடூர பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும் தலா ரூ5 லட்சம் அபராதமும் விதித்து அஜ்மீர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
1992-ம் ஆண்டு இந்தியாவையே அதிர வைத்தது அஜ்மீர் பலாத்கார வழக்கு. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்து நிர்வாணப் படங்கள் எடுத்து அவர்களது பெற்றோர்களை மிரட்டிய கும்பல் குறித்து ஊடகங்கள் அடுத்தடுத்து செய்திகளை வெளியிட ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்தது.

நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜ்மீர் பலாத்கார வழக்கில் சூபி மொய்னுதீன் ஹாசன் கிஸ்டி தர்கா நிர்வாகிகளான காதிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அரசியல் ரீதியாக அஜ்மீர் பலாத்கார வழக்கை விசாரித்த அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தன. இந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டாலும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகினர். சிலரை நீதிமன்றமே விடுதலை செய்தது. ஒரு சிலர்தான் தண்டனையை அனுபவித்தனர்.. அஜ்மீர் பலாத்கார வழக்கில் 'அரசியல் தலை'கள் பலரும் தப்பிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அஜ்மீர் சம்பவத்துக்கு நீதி கோரி பல்வேறு மக்கள் இயக்கங்கள், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
அஜ்மீர் 1992 என்ற பெயரில் கடந்த ஆண்டு திரைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் பல கடும் எதிர்ப்பு தெரிவிக்க பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
மேலும் அஜ்மீர் போக்சோ நீதிமன்றத்திலும் இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் 2001-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் கடந்த ஜூலை மாதம்தான் விசாரணைகள் முடிவடைந்தன. இதனால் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அஜ்மீர் போக்சோ நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக 6 குற்றவாளிகளும் அஜ்மீர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
1992-ம் ஆண்டு அஜ்மீர் பலாத்கார வழக்கில் நஃபீஸ் கிஸ்டி, நசீம் என்ற தர்ஷான், சலீம் கிஸ்டி, இக்பால் பாதி, சோகில் கனில், சையத் ஜாமீர் ஹூசைன் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என அஜ்மீர் போக்சோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது. அத்துடன் 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இருப்பினும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பலரும் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வருகிறவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications