குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை.. ஜாகியா வழக்கு ஹைகோர்ட்டில் தள்ளுபடி!
குஜராத் கலவரத்தில், மோடியை குற்றம்சாட்ட எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்பதால், மனு தள்ளுபடி செய்யப்படுவதாக குஜராத் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
காந்திநகர்: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் மோடியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரி
ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கை அம்மாநில ஹைகோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
ஜாகியா ஜாப்ரி, சமூக சேவகர் டீஸ்டா ஸ்டால்வட் ஆகியோர் இணைந்து இந்த வழக்கை தொடுத்திருந்தனர். கலவரம் நடந்தபோது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரர மோடியும் சதியின் பங்குதாரர் என மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்பதால், மனு தள்ளுபடி செய்யப்படுவதாக குஜராத் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.

மோடிமீதான குற்றச்சாட்டு குறித்து குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நியாயமான முறையில் விசாரணை நடத்தியதாக குறிப்பிட்ட ஹைகோர்ட் நீதிபதி சோனியா கோகானி, அதேநேரம், சிறப்பு புலனாய்வு குழு இதுகுறித்து கூடுதலாக விசாரிக்க உத்தரவிடும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிப்பதாக தெரிவித்தார்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடந்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை என தெரிவித்தது. இதனால் வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்துதான் ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார், என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications