ப்ளூவேல் விளையாட்டல்ல சாவுக்காக விரிக்கப்படும் வலை... மீட்கப்பட்ட காரைக்கால் இளைஞரின் வாக்குமூலம்!
ப்ளவேல் என்பது விளையாட்டல்ல சாவுக்காக விரிக்கப்படும் வலை என்று இந்த விளையாட்டிற்கு அடிமையாகி தொடக்கத்திலேயே மீட்கப்பட்ட காரைக்கால் இளைஞர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் : நிரவியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்ற இளைஞர் ப்ளூவேல் விளையாட்டிற்கு அடிமையானது கண்டபிடிக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார். ப்ளூவேல் விளையாட்டல்ல உயிரை பறிக்கும் விஷயம் என்று அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
Recommended Video

காரைக்காலை அடுத்த நிரவியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் என்ற 22 வயது இளைஞர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர், அங்கு பணிபுரியும் நண்பர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளார். இந்த வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து அலெக்சாண்டருக்கு ப்ளூ வேல் விளையாட்டுக்கான லிங்க் வந்துள்ளது. ப்ளூ வேலின் அபாயம் குறித்து அறிந்திருந்த போதும், துணிச்சலுடன் விளையாடத் தொடங்கிய அலெக்சாண்டர், பின்னர் இந்த கேமுக்கு அடிமையாகியுள்ளார்.
இது குறித்து காரைக்கால் எஸ்பி வம்சிதார் ரெட்டி முன்னிலையில் அலெக்சாண்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : என்னுடைன் பணியாற்றும் நண்பர்கள் மூலம் எனக்கு இந்த ப்ளூவேல் விளையாட்டிற்கான லிங்க் வாட்ஸ் அப்பில் கிடைத்தது. விடுமுறையில் சென்னையில் இருந்து நிரவி வந்த போது துணிச்சலுடன் தான் இந்த விளையாட்டை விளையாடத் தொடங்கினேன்.

ஆபத்தானது
ஆனால் போகப் போக எனக்கு இது ஆபத்தான விளையாட்டு என்பது தெரிய வந்தது. எப்போதும் 2 மணிக்கு மேல் தான் டாஸ்க்குகள் கொடுக்கப்படும். முதலில் ப்ளூவேல் அட்மின் என்னைப்பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் வாங்கி வைத்துக் கொண்டது. தினந்தோறும் பேய்ப்படங்களை பார்க்கச் சொல்வார்கள்.

வெளியே செல்ல முடியாது
ஐந்தாவது டாஸ்க்கில் என்னுடைய கையை கிழித்து ப்ளூவேல் வரையச் சொன்னார்கள், ஆனால் நான் அதை செய்யவில்லை. என்னுடைய வீட்டில் உள்ளவர்களுடன் நான் பேசுவது கிடையாது, தனிமையாகவே இருந்தேன். விளையாட்டில் இருந்து வெளியே வர நினைத்தாலும் முடியவில்லை.

சுடுகாட்டில் செல்ஃபி
சுடுகாட்டில் போய் நின்று புகைப்படம் எடுத்து போடச் சொன்னது ப்ளூவேல் அட்மின். இதற்காக அக்கரைவட்டம் கல்லறையில் நின்று அதிகாலையில் புகைப்படம் எடுத்து பதிவு செய்தேன், என்கிறார் அலெக்சாண்டர்.

கண்டுபிடித்த சகோதரன்
அதிர்ஷ்டவசமாக அலெக்சாண்டரின் செயல்பாடுகளில் வித்தியாசத்தை உணர்ந்த அவருடைய தம்பி அஜித், அலெக்சாண்டர் சுடுகாட்டில் செல்ஃபி எடுத்தது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காரைக்கால் போலீசார் அலெக்சாண்டரை பிடித்து அவருடைய செல்போனில் இருந்து ப்ளூவேல் லிங்கை உடனடியாக டெலிட் செய்துள்ளனர்.

போலீசார் வேண்டுகோள்
அலெக்சாண்டரை இந்த விளையாட்டில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. கேமின் லிங்க் வந்தால், அது தொடர்பாக காவல்நிலையத்தில் கூற வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். துணிச்சலுடன் விளையாடுவதாகக் கூறி கேமில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications