குவஹாத்தி தீர்ப்பு எதிரொலி: ஸ்பெக்ட்ரம் வழக்கை சிபிஐ விசாரிக்க ராசா கடும் எதிர்ப்பு

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாஹித் பல்வாவின் வழக்கறிஞர் மஜீத் மேமம், இந்த வழக்கை விசாரிக்கும் முன்பு, குவாஹாத்தி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். சிபிஐ ஒரு சட்டப்பூர்வ போலீஸ் அமைப்பே அல்ல என்று அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அப்படியென்றால் அரசியலமைப்பு அந்தஸ்து அல்லாத ஒரு அமைப்பு தொடர்ந்துள்ள இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கே அதிகாரம் கிடையாது. மேலும், இவ்வழக்கை விசாரிப்பது குவாஹாத்தி உயர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதற்குச் சமமாகும். இந்த விவகாரத்தில் தெளிவு ஏற்படும்வரை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ. ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுசர்மாவும் குவாஹாத்தி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் என்னிடம் உள்ளது. அதை ஐ-ஃபோனில் பதிவு செய்துள்ளேன். நீதிபதி வேண்டுமானால் அதைப் பரிசீலித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்றார்.
இதையடுத்து நீதிபதி ஓ.பி. சைனி, அந்தத் தீர்ப்பு தொடர்பான விவரங்களை நானும் நாளிதழ்கள் வாயிலாகப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்து என்னால் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது. வழக்கின் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாக தலைமை விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷி ஆஜராகியுள்ளார். அவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை நடத்தலாம் என்றார்.
இதேபோல் 1984 சீக்கியர் படுகொலை தொடர்பான வழக்கில் சஜ்ஜன்குமார் தரப்பும் குவஹாத்தி நீதிமன்ற தீர்ப்பை முன் வைத்து சிபிஐ விசாரணைக்கு தடை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications