'கலைஞர் டிவி' வழக்கில் மு.கஸ்டாலின்? "ஸ்வான்" பல்வாவை சந்தித்ததாக சார்ஜ்ஷீட்டில் தகவல்!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் ஷாகித் பல்வா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருப்பதாக அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைப் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி பணம் கொடுத்தது என்பது சிபிஐ புகார். இந்த பணப்பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அமலாக்கப்பிரிவு தனியே வழக்குப் பதிவு செய்ததது.
அன்னிய செலாவணி மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கையோடு டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்தது. இதில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி. முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வாவை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து பேசியதாக அக்குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாதிக்பாட்ஷாவின் வாக்குமூலம்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மிக நெருங்கிய நண்பராக இருந்த சாதிக் பாட்ஷா கடந்த 2011 ஜனவரி 28-ம் தேதி, மற்றும் பிப்ரவரி 28-ம் தேதி ஆகிய தேதிகளில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் "2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாகித் பல்வா, அப்போதைய துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். ஸ்டாலினின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது ஆ. ராசாவும் இருந்தார். நான் பல்வாவை நேரில் அழைத்துச் சென்றேன். ஆனால் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை" என்றும் கூறியிருந்திருக்கிறார்.

பாட்ஷா மர்ம மரணம்
இந்த சாட்சியம் அளித்ததாகக் கூறப்பட்ட ஒரு வாரத்தில் சாதிக் பாட்ஷா மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாமின் ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா ஆகியோரை எப்படித் தெரியும் என்ற கேள்விக்கு "சுற்றுச் சூழல் அமைச்சரவை அலுவலகத்தில் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஆ. ராசாவை சந்திக்க அவர்கள் வந்த போது பழக்கம் ஏற்பட்டது என்று சாதிக் பாட்ஷா கூறியுள்ளார்.

சென்னையில் சந்திப்பு
நானும் ரியல் எஸ்டேட் தொழில் புரிந்து வருவதால் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். சென்னையிலேயே அவர்களை இரண்டு, மூன்று தடவை சந்தித்திருக்கிறேன். திருச்சியில் ஒரு இடத்தை வாங்கச் சொல்லி அவர்களிடம் சொன்னேன். அவர்களும் வாங்கினார்கள். ஸ்டாலினைச் சந்திக்கச் சென்ற போது நான் வெளியிலேயே நின்று கொண்டேன்" என்று பதில் அளித்திருக்கிறார். இவ்வாறு டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

டி.கே.எஸ் இளங்கோவன் மறுப்பு
ஆனால் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள திமுக தலைமை நிலைய செயலர் டி.கே.எஸ். இளங்கோவன், "இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகத் தெரிவதில்லை. மு.க.ஸ்டாலினோ, ஷாகித் பல்வாவோ தாங்கள் நேரில் சந்தித்துக் கொண்டதாக எங்கேயும் கூறவில்லை. இது குறித்து வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படும் சாதிக் பாட்ஷாவும் தற்போது உயிருடன் இல்லை. 'கலைஞர் டிவி'க்கும் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே ஷாகித் பல்வாவோ மற்றவர்களோ சந்திக்கவேண்டிய அவசியமும் இல்லை" என்று மறுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications