அன்பான மம்தா பானர்ஜி பாட்டிக்கு.. அம்மாவுக்கு டிரான்ஸ்பர் தாங்க.. சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்
கொல்கத்தா: ‛‛அன்புள்ள மம்தா பாட்டியே.. எங்க அம்மாவுக்கு டிரான்ஸ்பர்தாங்க.. என்னால் அம்மாவை பிரிந்து வாழ முடியவில்லை'' என்று மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய உருக்கமான கடிதம் கவனம் பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியை சேர்ந்தவர் ஸ்வாகதா பெயின். இவரது மகன் பெயர் ஐதிஜ்ய தாஸ்(வயது 5). இந்நிலையில் தான் கடந்த 2021ம் ஆண்டில் ஸ்வாகதா பெயினுக்கு அரசு பள்ளியில் வேலை கிடைத்தது.
தொடக்க பள்ளி ஆசிரியையாக அவர் நியமனம் பெற்றார். அவர் அசனால் பகுதியில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தினாஜ்பூரில் நியமனம் செய்யப்பட்டார்.

குடும்பத்தை பிரிந்து பணி
இதனால் ஸ்வாகதா பெயின் தனது மகன் ஐதிஜ்ய தாஸை பிரிந்து தினாஜ்பூரில் தங்கி பணியாற்றி வருகிறார். 4 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் நிலையில் அவர் பணி இடமாறுதல் கோரினார். ஆனால் அவருக்கு பணி இடமாறுதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் ஆசிரியை ஸ்வாகதா பெயினின் மகன் ஐ திஜ்ய தாஸ் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளார். தனது தாய்க்கு பணியிடமாறுதல் வேண்டும் என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
சிறுவன் கடிதத்தில் இருப்பது என்ன?
அந்த கடிதத்தில், ‛‛அன்புள்ள மம்தா (மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி) பாட்டி. நான் அசன்சோலில் வசித்து வருகிறேன். என் அப்பா மற்றும் தாத்தாவுடன் இங்கு இருக்கிறேன். என் அம்மா என்னை விட்டு பிரிந்து பணியாற்றி வருகிறார். வடக்கு தினாஜ்பூரில் அவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணியின் காரணமாக எங்களை விட்டு பிரிந்துள்ளார்.
அவ்வப்போது மட்டுமே என்னை பார்க்கவருகிறார். என் அம்மா இல்லாமல் நான் கவலையாக இருக்கிறேன். என் அம்மா மீது எனக்கு அதிக அன்பு இருக்கிறது இதனால் அவரை பிரிந்து வாழ விரும்பவில்லை. எனவே என் அம்மாவுக்கு பணி இடமாறுதல் வழங்க வேண்டும்'' என்று கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
முதல்வரால் மட்டுமே சாத்தியம்
இதுதொடர்பாக கடிதம் எழுதிய சிறுவன் ஐதிஜ்ய தாஸின் தாயான ஆசிரியை ஸ்வாகதா பெயின் கூறுகையில், ‛‛நாங்கள் ஏற்கனவே எங்களுக்கு பணி இடமாறுதல் கோரி கடிதம் எழுதி உள்ளோம். எங்களின் குடும்பம் வசிக்கும் பகுதியின் அருகே இடமாறுதல் கேட்டுள்ளோம்.
நான் கடிதம் எழுதுவதை பார்த்து எனது மகன் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளான். எங்களுக்கு பணி இடமாறுதல் பெற்று தர வேண்டும் என்றால் அது முதல்வர் மம்தா பானர்ஜியால் மட்டுமே முடியும். இதனால் தான் என் மகன் அவருக்கு கடிதம் எழுதி உள்ளான்'' என்றார்.
6,000 ஆசிரியர்கள் பாதிப்பு
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை கடந்த 2021ம் ஆண்டில் மொத்தம் 16,000 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து நீண்ட தொலைவில் பணியமர்த்தப்பட்டனர்.
சுமார் 6,000 ஆசிரியர்கள் வரை இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்கள் பணி இடமாறுதல் கோரி அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் சிறுவன் ஐதிஜ்ய தாஸ் தனது அம்மா ஸ்வாகதா பெயினுக்கு இடமாறுதல் கோரி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications