‛5 வயது குழந்தை வடிவ ராமர்’’.. அயோத்தி ராமர் கோவிலில் வைக்கப்படும் சிலை இதுதான்.. ஸ்பெஷல் என்ன?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் நிறுவ வேண்டிய ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 வயது குழந்தை வடிவத்தில் ராமர் சிலை கருவறையில் வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் அந்த சிலை குறித்த முக்கிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 3 அடுக்குகளாக கோவில் கட்டும் பணி கடந்த 2019 ம் ஆண்டு தொடங்கியது. தற்போது முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்தது.

இதையடுத்து 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிபதிகள், சாமியார்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய சிலை இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராமர் கோவிலின் கருவறையில் 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.
இந்த சிலை என்பது 51 அடி உயரத்தில் இருக்கும். சிலையை பக்தர்கள் 35 அடி தூர இடைவெளியில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த சிலையை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. ராமர் கோவிலில் நிறுவ மொத்தம் 3 வடிவ ராமர் சிலைகள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து தான் இந்த குழந்தை வடிவிலான ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலையை ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வந்து கோவில் கருவறையில் வழங்குவார். அதன்பிறகு சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையின் மீது ராமநவமி தினத்தின் 5 நிமிடங்கள் வரை சூரியஒளி படும் வகையில் கோவில் கட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications