For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்க நகை வைத்திருக்க கட்டுப்பாடு இல்லைங்க.. குமாரசாமி தீர்ப்பை நினைத்து பாருங்க, குழப்பம் வராது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஒவ்வொரு தனி மனிதனும் இவ்வளவுதான் தங்கம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு வரையறுத்துள்ளதாக நேற்று பெரும் வதந்தி பரவியிருந்தது. ஆனால் அப்படி எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

உண்மையை சொல்லப்போனால், நகைகள் தொடர்பான பழைய சட்டத்தில் உள்ள ஷரத்துக்களில் ஒரு சிறு திருத்தத்தை கூட மத்திய அரசு செய்யவில்லை.

அப்படியிருந்தும், இந்த வதந்தி ஏன் பரவியது என்பது ஆராயப்பட வேண்டிய கேள்வி. இருப்பினும் இந்த தகவல் தமிழகம் போன்ற நகைகளை வாங்கி குவிக்கும் மக்களை கொண்ட மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது மட்டும் உண்மை.

நடந்த சம்பவம் இவ்வளவுதான்

நடந்த சம்பவம் இவ்வளவுதான்

புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8ம் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் பண முதலைகள் பலரும் தெரிந்தவர்கள் வங்கி கணக்குகளிலெல்லாம் தங்களிடமிருந்த பணத்தை டெபாசிட் செய்ய தொடங்கினர். இப்படி பணத்தை பரவலாக டெபாசிட் செய்து தப்ப நினைக்கும் பண முதலைகளுக்கு செக் வைக்கவே வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

வரி விதிப்பு

வரி விதிப்பு

தனிநபர் வங்கி கணக்குகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்கிறபோது, அந்த கணக்குகளை ஆய்வு செய்து வரி விதிக்கும் வகையில், லோக்சபாவில் கடந்த 29ம் தேதி ‘வருமான வரிகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2016' என்ற மசோதா, நிதி மசோதாவாக கொண்டு வரப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

வரி மசோதா அம்சம்

வரி மசோதா அம்சம்

இந்த மசோதா, கணக்கில் காட்டாத கருப்பு பணம் வைத்திருப்போர், டிசம்பர் 30ம் தேதிக்குள் அதை வருமான வரித்துறையிடம் அறிவித்து, 50 சதவீத வரி செலுத்த வழிவகை செய்கிறது. மீதி 50 சதவீதத்தில் 25 சதவீதம் திரும்ப தரப்படும். எஞ்சிய 25 சதவீதம் 4 ஆண்டுக்கு திரும்பப்பெற முடியாத, வட்டி இல்லாத மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். டிசம்பர் 30ம் தேதிக்குள் அறிவிக்க தவறுகிறபோது, அந்த தொகைக்கு 60 சதவீத வரி, 25 சதவீத கூடுதல் வரி (இது வருமானத்தின் 15 சதவீதமாக இருக்கும்) என 75 சதவீதம் வரி, 10 சதவீத அபராதம் என 85 சதவீதம் இழக்க நேரிடும். இந்த சட்டத்திருத்தப்படி, கணக்கில் காட்டாத பணத்திற்கு வரி விதிப்பு அளவு அதிகரிக்கப்பட்டது. அவ்வளவுதான்.

தங்க நகை

தங்க நகை

இந்த சட்டத்தில்தான், தனி நபர் எவ்வளவு நகை வைத்திருக்கலாம் என்றும் மத்திய அரசு ஷரத்துக்களை சேர்த்துவிட்டதாக கூறி வதந்தி பரவியது. ஆனால் அது உண்மையல்ல. இப்படி ஒரு ஷரத்து 1961 முதலே சட்டத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது. வருமான வரி சட்டம் 1961, பிரிவு 115 பிபிஇ- பிரிவு இதை வலியுறுத்தி கூறுகிறது. அதுவும் கூட, தங்க நகை அணிவதை கட்டுப்படுத்துவதற்காக கிடையாது. வருமானத்திற்கு அதிகமாக என்றாலும்கூட ஒருவரிடம் எவ்வளவு நகைகள் இருக்கலாம் என்பதற்காக சேர்க்கப்பட்ட ஷரத்துதான் அது.

புதிய விதிமுறை சேர்க்கப்படவில்லை

புதிய விதிமுறை சேர்க்கப்படவில்லை

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் இதுதான்: 'வருமான வரிகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2016'-ல், பாரம்பரிய (மூதாதையர் வழியில் வந்த குடும்ப நகை) நகைகள் உள்பட எல்லாவிதமான தங்க நகைகளுக்கும் 75 சதவீத வரியும், 10 சதவீத அபராதமும் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது என வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அந்த மசோதாவில், நகைகள் மீது வரி விதிப்பதற்காக புதிதாக எந்த விதிகளும் சேர்க்கப்படவில்லை. அதில் வருமான வரி சட்டம் 1961, பிரிவு 115 பிபிஇ படி, தற்போதைய வரி விதிப்பு 30 சதவீதம் என்பதை 60 சதவீதம் வரி, 25 சதவீதம் கூடுதல் வரி, செஸ் வரி என உயர்த்தத்தான் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு, கணக்கில் காட்டாத முதலீடுகள் மீது வரி விதிப்பதற்கு வழி செய்கிறது.

ஏற்கனவே உள்ள விதிமுறை

ஏற்கனவே உள்ள விதிமுறை

கணக்கில் காட்டப்பட்ட வருமானத்தை கொண்டோ, விவசாயம் உள்ளிட்ட வரிவிலக்கு பெற்ற வருமானத்தை கொண்டோ, குடும்ப சேமிப்பு கொண்டோ வாங்கப்பட்ட நகைகள், தங்க கட்டிகள் மற்றும் மூதாதையர் வழிவந்த நகைகள் விஷயத்தில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவுரை எண் 1916-ன் படி வரி விதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கை விளக்குகிறது.

பறிமுதல் கிடையாது

பறிமுதல் கிடையாது

அதாவது ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, திருமணமான பெண்கள் ஒவ்வொருவரும் அரை கிலோ அளவுக்கு அதாவது 62.5 சவரன் தங்க நகைகள் வைத்துக்கொள்ளலாம். திருமணமாகாத பெண்களைப் பொறுத்தமட்டில் ஒவ்வொருவரும் கால் கிலோ அளவுக்கு, அதாவது, 31.5 சவரன் தங்க நகைகள் வைத்துக்கொள்ளலாம். திருமணமான ஆண்கள் ஒவ்வொருவரும் 100 கிராம் அளவுக்கு அதாவது, 12.5 சவரன் தங்க நகை வைத்துக்கொள்ள முடியும். இதுவும்கூட, நகை அணிவதை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட அறிவுறுத்தல் கிடையாது. ஒரு நபரின் வீட்டில் வருமான வரி சோதனை நடக்கிறது என வைத்துக்கொள்வோம். அவர் வீட்டிலுள்ள பெண்கள், ஆண்களிடம், வருமானத்திற்கு அதிகமாக, கணக்கில் காட்ட முடியாமல், இவ்வளவு நகைகள் இருந்தால் கூட அதை வருமான வரி அதிகாரி பறிமுதல் செய்யாமல் விட்டுவிட வேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது.

சலுகைதான் இது

சலுகைதான் இது

ஏனெனில், இந்த அளவுக்கு தங்க நகைகள் வைத்திருந்தால் கூட குடும்ப பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில்கொண்டு, அவற்றை பறிமுதல் செய்யாமல் இருப்பதற்கு சோதனை நடத்தும் அதிகாரிக்கு தனிப்பட்ட அதிகாரம் தந்துள்ளது இந்த விதிமுறை. எனவே இந்த விதிமுறை, வருமானத்திற்கு அதிகமாக நகைகளை சேர்த்திருந்தாலும் கூட அவர்களுக்கும் சலுகை காட்டவே கொண்டுவரப்பட்டது. இதில் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள்?

குமாரசாமி தீர்ப்பு

குமாரசாமி தீர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையின்போது, கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி ஒரு தீர்ப்பளித்தார் நினைவு உள்ளதா? ஜெயலலிதா கணக்கில் காட்டாத சொத்துக்களின் மதிப்பு அவரின் வருமானத்தைவிட 8.12 சதவீதம் அதிகம் இருக்கிறது. இருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் வழக்கில் இருந்து விடுதலை செய்துவிடலாம் என குமாரசாமி கூறியிருந்தார். அதாவது 8.12 சதவீதம் அதிகமாக இருப்பது ஒரு குற்றமல்ல என்பது தீர்ப்பின் சாரம். அதேபோலத்தான், வருமானத்திற்கு அதிகமாக மேற்கண்ட அளவுக்கு, ஆணும், பெண்ணும் நகை சேர்த்துக்கொண்டால் கூட தப்பில்லை என்றுதான் வருமான வரி சட்டத்தில் உள்ள பழைய விதிமுறை கூறுகிறது. அதை இப்போதைய மத்திய அரசும் திருத்தவில்லை. எனவே இதில் குழம்பிக்கொள்ள ஒன்றுமில்லை. (பி.கு: ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை சரியாக கணக்கிட்டால் அது, 76 சதவீதம் அளவுக்கு கூடுதல் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டது குறிப்பிடத்தக்கது)

English summary
During search operations, conducted by I-T Department, there would be no seizure of gold jewellery and ornaments to the extent of 500 grams per married women, 250 grams per unmarried women as also 100 grams per male member of the family, it said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X