567 கிராமங்களில் சிக்னல் இல்லை.. பாதிக்கும் மேல் பெண்களிடம் செல்போன் இல்லை - இது குஜராத் மாடல்
குஜராத் மாநிலத்தில் 51 சதவீத பெண்களிடம் சொந்தமாக செல்போன் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 51 சதவீத பெண்களிடம் சொந்தமாக செல்போன் இல்லை என்றும், 567 கிராமங்களில் செல்போன் சிக்னலே கிடைக்காது என்றும் மக்களவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசிங் சவுஹான் தெரிவித்து இருக்கிறார். 800 கிராமங்களில் 4ஜி சிக்னலே இல்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவையில் தெலுங்கானா காங்கிரஸ் உறுப்பினர் அனுமுலா ரேவந்த் ரெட்டி எழுப்பிய கேள்வி குறித்து பதிலளித்த மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுஹான் அளித்து இருக்கும் பதிலில் குஜராத்தின் செல்போன் பயன்பாடு குறித்த புள்ளி விபரத்தை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி குஜராத்தில் இருக்கும் 18,425 கிராமங்களில் 567 கிராமங்களில் சிக்னலே கிடைக்காத காரணத்தால் மக்கள் செல்போன்களை பயன்படுத்தாமல் உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

51% பெண்களிடம் செல்போன் இல்லை
இது அல்லாமல் 821 கிராமங்களில் இன்னும் 4ஜி அலைவரிசை சேவை கூட வழங்கப்படவில்லை. மேலும் அம்மாநிலத்தில் 48.80 சதவீத பெண்கள் மட்டுமே சொந்தமான செல்போன் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். 51.20 சதவீத குஜராத் பெண்கள் சொந்தமாக செல்போன் பயன்படுத்தாமல் உள்ளார்களாம்.

15 முதல் 49 வயது
கடந்த 2019 முதல் 2021 வரை தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கையை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 50 சதவீதத்துக்கும் குறைவான பெண்களே செல்போன் பயன்படுத்துவதாக கூறப்பட்ட 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பாலின ஏற்றத்தாழ்வு
இதுபற்றி பொருளாதார அறிஞர் இந்திரா ஹிர்வே தெரிவிக்கையில், "குஜராத்தில் இருக்கும் ஆண்கள் பெண்கள் இடையிலான பாலின ஏற்றத்தாழ்வு இதில் வெளிப்படுகிறது. பெண்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுக்கூடாதென தடுக்கப்படுகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு வருவாயும் கிடைப்பதில்லை." என்றார்.

குஜராத்தின் பழங்குடி மக்கள்
இதுகுறித்து தொலைதொடர்புத்துறை நிபுணர் விஷால் தெரிவிக்கையில், "செல்போன் சிக்னல் பிரச்சனையில் பெரிதும் பாதிக்கப்படுவது பழங்குடியின மக்கள்தான். அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியும் இந்த காலத்திலும் செல்போன் இணைப்பை முழுமையாக வழங்க முடியவில்லை. குறிப்பாக குஜராத்தின் பழங்குடி பகுதிகளில்.

குஜராத் மாவட்டங்கள்
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் டாங் மாவட்டத்தில் தோராயமாக 90 கிராமங்களில் செல்போன் இணைப்பு இல்லை. அதேபோல் கட்ச் மாவட்டத்தில் 84 கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காது. அதை தொடர்ந்து நர்மதா மாவட்டத்தில் 64 கிராமங்களில் செல்போன் இணைப்பு வழங்கப்படவில்லை.

வருவாய் குறைவான கிராமங்கள்
குறைவாக வருவாய் ஈட்டும் மக்கள் வசிக்கும் பகுதிகள் அல்லது செல்போன் பயன்பாடு குறைவாக இருக்கும் பகுதிகளில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் செல்போன் கோபுரங்களை வைக்க மறுக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் செல்போன் சேவைகள் இல்லாத கிராமங்கள் இன்னும் இருப்பது வினோதமாக உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications