ரூ.91,000 கோடி கடனில் தத்தளிக்கும் கம்பெனியை கைவிட்ட ரவி பார்த்தசாரதி லண்டன் பறந்தார்
Recommended Video

டெல்லி: ரூ.91,000 கோடி கடனில் தத்தளிக்கும், ஐஎல்&எப்எஸ் நிறுவன முன்னாள் தலைவர் ரவி பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், இரவோடு வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ரவி பார்த்தசாரதி ஏற்கனவே சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். மற்ற நிர்வாகிகளை வெளிநாடு செல்ல விடாமல் தடுப்பது லுக்அவுட் நோட்டீஸின் நோக்கமாகும்.
Infrastructure Leasing & Financial Services என்ற இந்த நிறுவனத்தின் துணை தலைவரான ஹரி சங்கரன், முன்னாள் மேலாண் இக்குநர் ரமேஷ் பாவா மற்றும் இயக்குநர் ராம்சந்த் ஆகியோருக்கு எதிராக தனித்தனி லுக்அவுட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்திற்கு ரூ.91,000 கோடி கடன் உள்ளது. அதில் ரூ.57,000 கோடி வங்கிகளுக்கு செலுத்த வேண்டியதாகும். இவர்கள் தங்கள் நிறுவனத்தில் நடைபெறும், தொழில்கள், மோசமான நிர்வாகம் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்கள் என்று அரசு தரப்பு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனம் மூழ்கப்போகிறது என்று தெரிந்த பிறகு கப்பலில் இருந்து தப்பித்து ஓடுவதை போல தங்கள் பதவிகளை மேற்கண்டவர்கள் ராஜினாமா செய்துவிட்டு தப்பியுள்ளனர் என்று அரசு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பார்த்தசாரதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ரமேஷ் பாவா, செயல் இயக்குநர்கள் மட்டத்தில் இல்லாத நிர்வாகிகள், வைபவ் கபூர் மற்றும் நான்கு சுய இயக்குநர்கள், இந்த நிறுவனத்திலிருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கலைக்கப்பட்டு அரசு பொறுப்பை எடுத்தது. உதய் கோட்டக், இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து தப்பிவிட்டார். இதேபோல ரூ.6,800 கோடி கடன் வாங்கிய துபாயை மையமாகக் கொண்டு தங்கம் மற்றும் வைர வியாபாரம் செய்து வரும் வின்சம் டைமண்ட்ஸ் அன்ட் ஜுவல்லரி லிமிடெட்டின் உரிமையாளர் ஜதின் மேத்தா தனது இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று கூறிவிட்டு, செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸ் நாட்டில் குடும்பத்தோடு குடியுரிமை பெற்றுவிட்டார். இப்போது ரவி பார்த்தசாரதியும் லண்டனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications