கொல்கத்தா மருத்துவர் வழக்கில் திருப்பம்.. சிக்குகிறாரா முன்னாள் கல்லூரி முதல்வர்? கோர்ட் அதிரடி
கொல்கத்தா: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷூக்கு உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த சிபிஐக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் மாணவியுடன் பணியாற்றிய 5 சக மருத்துவர்களையும் இச்சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதாகும் பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 33 வயதாகும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கம்(ஆர்டிஏ), டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனை ஆகியவை 11 நாள்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளன. மேலும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுஒருபுறம் எனில், இன்று வழக்கு விசாரணையின் போது, அரசு மருத்துவமனைகளில் பல மருத்துவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் 36 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வேலை வாங்கப்படுகின்றனர். இது மிகவும் கவலை அளிக்கிறது, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அமைத்துள்ள குழு, மருத்துவரின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து ஆய்வு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சிபிஐ மற்றும் கொல்கத்தா காவல்துறை சார்பில் முதல் கட்ட விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியது. இதன்படி "ஆகஸ்ட் 8 மற்றும் 9 அதிகாலையில் குறிப்பிட்ட பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆனால் குற்றம் நடந்த விவரங்கள் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 10.10 மணிக்குதான் காவல்துறைக்கு தெரியப்படுத்தி உள்ளது. இவ்வளவு நீண்ட நேரம் காவல்துறைக்கு விஷயத்தை சொல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? உண்மையில் இது எங்களுக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது" என்று கூறியது.
மேலும் ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6.10 மணிக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பதாக கூறிய உச்ச நீதிமன்றம், அதுவும் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தார் என்ற காரணத்தை கூறி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், ஆனால் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தார் என்ற அந்த விபரம் அன்று இரவு 11:30 மணி வரையும் காவல்துறைக்கு அனுப்பப்படாமல் இருந்திருப்பதகாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இவையெல்லாம் நிச்சயம் கவலை அளிக்கக் கூடிய தகவல்கள் என்றும் இதற்கு மேற்கு வங்க காவல்துறையால் உரிய பதிலளிக்க முடியவில்லை என்றால் பதிலளிப்பதற்கு பொறுப்பான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
இதனிடையே கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷூக்கு உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த சிபிஐக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்து. மேலும் மாணவியுடன் பணியாற்றிய 5 சக மருத்துவர்களையும் இச்சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications