Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட 'இந்துத்துவவாதிகளை' அதிர்ச்சியில் உறைய வைத்த மோடியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஜாதிவாரி இடஒதுக்கீடு என்பது எல்லாமே இந்துத்துவா கொள்கையை பேசுகிற அத்தனை பேருக்கும் எட்டிக்காய் கசப்புதான்; பரம எதிரிகள்தான். ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைத்துவிட்டால் 'இந்துக்களே ஒன்றுபடுங்கள்! இந்துக்களாய் ஒன்றுபடுவோம்' என்கிற கூச்சலுக்கு வேலையே இல்லாமலேயே போய்விடுமோ என்கிற பேரச்சம்தான் இந்த அதிர்ச்சியின் பின்னணி என்கின்றனர் சமூகவியலாளர்கள்.

பாஜக என்பது இன்றைக்கு அரசியல் கட்சி. இதன் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக இந்துத்துவா சிந்தனையை தூக்கிப் பிடிக்கிற இந்த சித்தாந்த முகாமின் ஒற்றை முழக்கமே 'இந்துக்களே ஒன்று படுவோம்' என்பதுதான்.

Modi

திராவிடர் இயக்கமும் சமூக நீதியும்

இந்த சித்தாந்தத்துக்கு நேர் எதிரானது திராவிடர் இயக்கம். கடந்த 100 ஆண்டுகளாக, ஜாதிய அடிப்படையிலான பிளவுகளுக்கு எதிராக, ஜாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, ஜாதிய அடிப்படையிலான கல்வி,வேலை வாய்ப்பு உரிமை மறுப்புகளுக்கு எதிராக கலகம் செய்து வருவதுதான் திராவிட இயக்கம். இந்த திராவிட இயக்கத்தின் முதன்மை கோரிக்கைகளில் ஒன்றுதான் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள்

இடஒதுக்கீடு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பவை எல்லாம் எப்போதும் ஆர்.ஏஸ்.எஸ்.- பாஜக பரிவாரங்களால் "சகிக்க முடியாத' சொற்கள்தான். நாடு விடுதலை அடைந்து பன்னெடுங்காலம் கடந்த பின்னர்தான் 1990-ல் இந்த நாட்டின் பெரும்பான்மையினராகிய இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு - வெறும் 27% இடஒதுக்கீடு மட்டுமே வழங்க வகை செய்யும் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தன.

பற்றி எரிந்த வட இந்திய தேசம்

அவ்வளவுதான்.. அன்று வட இந்தியா முழுவதுமே பற்றி எரியவைத்ததும் இதே.. இதே.. இன்றைக்கு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுக்கப் போவதாக சொல்லும் பாஜ்க பரிவாரங்கள்தான். மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிராக அயோத்தி ராமர் கோவில் யாத்திரையை முன்னிறுத்தியவர் பாஜகவின் நிறுவனர் தலைவர் எல்.கே.அத்வானி. இதனால் மண்டல் vs கமண்டல் என்கிற விவாதம் நடந்ததும் வரலாறு.

இடஒதுக்கீடு- சமூக நீதி புரட்சி விளைவுகள்

அன்றைக்கு இடஒதுக்கீடுக்கு எதிராக கோஸ்வாமிகள் தீ வைத்து எரிந்ததற்கு காரணம் வட இந்தியா முழுவதற்கும், ஆதிக்க ஜாதியினரின் பிடியில் இருந்த பாஜக பரிவாரங்கள் என்பதை வரலாறு நன்கறியும். இன்னொரு பக்கம் இந்த சமூக நீதிப் புரட்சியின் விளைவாக இதர பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான தனித்தனியான அரசியல் கட்சிகள் விஸ்வரூபம் எடுத்தன. ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி இவை எல்லாம் இங்கிருந்தே பிறப்பெடுத்தவை. இவைதான் இன்றைய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மூச்சுக்கு முன்னூறு முறை வலியுறுத்தியவை.


திராவிடர் இயக்கம்தான் காரணம்

இந்த ஜாதிவரி கணக்கெடுப்பு கோரிக்கையை கடந்த 20,30 ஆண்டுகளாகத்தான் வட இந்தியா பேசியது. அதற்கு முன்னரே 70, 80 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் திராவிடர் இயக்கம்தான் பேசியும் போராடியும் வந்தது. தென்னிந்தியாவில் திராவிடர் இயக்கம் இடைவிடாமல் நடததிய பிரசாரமும் போராட்டங்களும்தான் விபிசிங்கை மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவும் வைத்தது.. இன்றைய வட இந்தியாவின் சமூக நீதிக் கட்சிகள் பிறக்கவும் காரணமாக இருந்தது.

காலத்தால் மாறிய காங்கிரஸ் பேரியக்கம்

இப்படி காலந்தோறும் இடஒதுக்கீடு, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ், பாஜக பரிவாரங்கள் தீவிரமாகவே எதிர்த்தன. 2014-ம் ஆண்டுக்குப் பிந்தைய மோடி பரிவாரங்களும் இதில் விதி விலக்கு அல்ல. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாகத்தான் ஜாதிய ஒடுக்குமுறை, சமூக நீதி, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி அதிதீவிரமாக பேசுகிறது. குறிப்பாக ராகுல் காந்தியின் தலையெடுப்புக்குப் பின்னர் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு ஆயுதமாகவே காங்கிரஸ் கையில் எடுத்துக் கொண்டது காலத்தின் கட்டாயம்.

அர்பசன் நக்சல்கள் முத்திரை குத்திய மோடி

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பற்றி பேசுகிறவர்களை எல்லாம் அர்பன் நக்சல்கள் என முத்திரை குத்தியவர்தான் சாட்சாத் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி. இந்துக்களே! ஜாதி வாரியாக உங்களை பிரித்து உங்களது செல்வங்களையெல்லாம் இஸ்லாமியர்களிடம் பிரித்துக் கொடுக்கப் போகிறது காங்கிரஸ் என கூச்சமே இல்லாமல் பொய் சொன்னதும் இதே படைபரிவாரங்கள்தான்.


அடியோடு அந்தர் பல்டி- அதிர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.

இன்றைக்கு 100 ஆண்டுகளாக பாஜகவும் அதன் தாய் அமைப்பும் எதிர்த்து எதிர்த்து பேசிப் பேசி வளர்த்த 'இடஒதுக்கீடு' 'சமூக நீதி எதிர்ப்பு' என்ற நிலைப்பாட்டில் அடியோடு அந்தர் பலடி அடித்தாக வேண்டிய நெருக்கடி உருவாகிவிட்டது. இன்றைய சூழலில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இந்த ஆர்.எஸ்.எஸ், பாஜக பரிவாரங்கள் கிஞ்சித்தும் எதிர்த்து பேசவே முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

மூச்சு விடமுடியாத ஆர்.எஸ்.எஸ்

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையின் இந்த நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் அதிதீவிர இந்துத்துவவாதிகள் 'உள்ளுக்குள்' நிராகரிக்கலாம்.. வெறுத்து ஒதுக்கலாம்.. ஆனால் வெளிப்படையாக மூச்சு கூட விடமுடியாத அளவுக்கு நிலைமையை தலைகீழாக்கி வைத்துவிட்டார் அதே ஆர்.எஸ்.எஸ்.- பாஜக பரிவாரத்தின் பிரதமர் நரேந்திர மோடி.

வெட்ட வெளிச்சமாக்கிவிட்ட உண்மைகள்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும்? நடக்குமா? நடக்காதா? நிதி ஒதுக்கப்படுமா? ஒதுக்கப்படாதா? என்ற கேள்விகளுக்கு அப்பால், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்ற கோரிக்கையின் நியாயம் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இந்திய சமூக அமைப்பு எதன் எதன் பெயராலேயே சிறுபான்மை- ஆதிக்க ஜாதியினர் பிடியில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிர்க்கிறது; இந்த நிலத்தின் பெரும்பான்மை இதர பிற்படுத்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காவு கொண்டு ஒரு சிறுபான்மை ஆதிக்க ஜாதி கொழுத்து திரிகிறது என்ற பட்டவர்த்தமான உண்மைய- பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் மூடி மூடி மறைத்து வந்த இந்தியாவின் களநிலவரத்தை மோடி அமைச்சவரையின் ஒற்றை முடிவான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.

சமூக நீதிப் புரட்சியின் மைல் கல்

பிரதமர் மோடி அமைச்சரவையின் இந்த முடிவு, சமூக நீதிப் புரட்சிக்கான புதிய மைல் கல்லாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஜாதிகளை ஒடுக்கி- இந்தியாவிலேயே ஜாதிகளே இல்லை.. அத்தனை பேரும் இந்துக்கள் என்ற போர்வையில் ஜாதிய ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருந்த கூட்டம் இப்போது குலைநடுங்கிப் போய் கிடக்கிறது. ஆகையால்தான் பிரதமர் மோடி அமைச்சரவையின் இந்த துணிகர முடிவு, சமூக நீதிப் புரட்சியின் மைல் கல் என்கின்றனர் சமூக நீதியாளர்கள். இது தொடக்கம்தான் என தெரிகிறது.. இது அரசியல் எனத் தெரிகிறது.. ஆனால் 'ஆதிகக்வாதிகளின்' ஆணிவேரில் வெந்நீரை இந்த ஒற்றை முடிவே ஊற்றிக் கொண்டிருக்கிறது எனில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து முடிவுகள் வெளியாகி சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டால் இந்திய சமூகத்தின் எதிர்காலம் எப்படியான மறுமலர்ச்சியை பெறும் என்பதை நினைத்துப் பார்க்கையிலேயே நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது!

மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்பில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கிய கமிஷன்

மண்டல் ஆணையம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+