ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோயாளிக்கு வெளிநாட்டு பயண வரலாறு இல்லை.
Recommended Video

உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கும் மேல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மையானது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் உடன் இணைந்த பண்புகளைக் கொண்டது.
1979, 1980களுக்குப் பின்னர் பெரியம்மை தடுப்பூசி பரவலாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதுவும் கூட இந்த வைரஸ் இப்போது மீண்டும் உலகில் உலா வர காரணமாகியுள்ளது.
குரங்கு அம்மை குறித்து பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன். குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு கேரளத்தில் மூன்றுபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது. கேரளத்தில் இதுவரை குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள் தான். ஆனால் டெல்லியில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருப்பவர் எந்த வெளிநாட்டிற்கும் செல்லாதவர்.
இந்த நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாடி பகுதியில் வசிக்கும் நபர், 21 நாட்களுக்கு முன்பு நோய்த்தொற்றின் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர் தற்போது குணமடைந்து வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு வெளிநாட்டு பயண வரலாறு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் குரங்கு காய்ச்சலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications