அந்தரத்தில் பறந்த மாணவர்கள்.. குஜராத்தில் திடீரென இடிந்து விழுந்த பள்ளி சுவர்.. பதறவைக்கும் வீடியோ
காந்தி நகர்: குஜராத்தில் உள்ள பள்ளியின் முதல் தளத்தில் அமைந்துள்ள வகுப்பறையில் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென்று சுற்றுச்சுவர் இடிந்ததில் சில மாணவர்கள் தலைகீழாக விழுந்த பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் வகோடியா சாலையில் ஸ்ரீ நாராயண் குருகுல பள்ளி செயல்பட்டு வருகிறது. இது தனியார் பள்ளியாகும். இந்த பள்ளி நேற்று வழக்கம்போல் செயல்பட்டது.

நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது வகுப்பறையில் மாணவர்கள் உணவு சாப்பிட்டனர். அதன்பிறகு மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது முதல் தளத்தில் உள்ள வகுப்பறையின் சுற்றுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த வகுப்பறையின் ஒருபகுதி அப்படியே கீழ்நோக்கி விழுந்தது. இதில் சில மாணவர்கள் தலைகீழாக கீழே விழுந்தனர். வகுப்பறையில் இருந்த டெஸ்க்குகளும் கீழே விழுந்தன.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிற மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியே ஓடிவந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் ஆசிரியர்கள் மற்றும் வதோதரா தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதில் ஒரு மாணவன் தலையில் மட்டும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவன் அபாய கட்டத்தை தாண்டி நலமாக உள்ளார்.
இதுபற்றி பள்ளி முதல்வர் ரூபால் ஷா கூறுகையில், "ஒரு பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தோம். அப்போது சுவர் இடிந்து கீழே விழுந்ததில் ஒரு மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள் உடனடியாக மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினோம். மாணவர்களின் சைக்கிள்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுவர் விழுந்தது. இதில், பல சைக்கிள்களும் சேதமடைந்தன" என்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுபற்றி தீயணைப்பு துறை அதிகாரி வினோத் மோகித் கூறுகையில், ‛‛பள்ளி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளதாக எங்களுக்கு போன் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டோம். 7 ம் வகுப்பு படிக்கும் மாணவர் காயமடைந்துள்ளார். கட்டடம் இடிந்து சைக்கிள் நிறுத்தும் இடத்தின் மீது விழுந்தது. இதனால் அங்கு நிறுத்தப்ட்டு இருந்த 10 - 12 சைக்கிள்கள் சேதமடைந்துள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications