15 ஊழல் அமைச்சர்கள் மற்றும் ப.சிதம்பரம், அழகிரி, ராசாவுக்கு எதிராக ஆம் ஆத்மி போட்டி!
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த 15 ஊழல் கறை படிந்த அமைச்சர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்ரம், மு.க.அழகிரி, ராசா உள்ளிட்டோருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் 350 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தற்போது யாரையெல்லாம் எதிர்த்து இது போட்டியிடப் போகிறது என்ற தகவலும் கசிய ஆரம்பித்துள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் முதலில் தனது எதிரிப் பட்டியலில் வைத்திருந்ததாம் ஆம் ஆத்மி. ஆனால் பிரணாப் குடியரசுத் தலைவராகி விட்டதாலும், மன்மோகன் சிங் தேர்தல் களத்திற்கே வருவதில்லை என்பதாலும் அவர்களை பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாம்.

அறிவிக்கிறார் கெஜ்ரிவால்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 15 ஊழல் கறை படிந்த அமைச்சர்களுக்கு எதிரான வேட்பாளர்களை கெஜ்ரிவால் அறிவிப்பார் என்று தெரிகிறது.

பிப்ரவரி 7ம் தேதி வேட்பாளர் பட்டியல்
இந்த அமைச்சர்களுக்கு எதிரான வேட்பாளர்களின் முதல் பட்டியலை பிப்ரவரி 7ம் தேதி கெஜ்ரிவால் அறிவிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கெஜ்ரிவால் பிரசாரம் செய்தவர்கள்தான்
இந்த 15 பேருக்குஎதிராகவும் கடந்த 2012ம் ஆண்டு கெஜ்ரிவால், அன்னா குழுவில் இருந்தபோதே தீவிரமாக எதிர்த்துப் பிரசாரம் செய்ய்யப்பட்டவர்கள்தான். இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை கோரி கெஜ்ரிவால் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் அப்போது நடத்தியிருந்தார்.

முக்கியமான 3 பேரின் பெயர்கள் நீக்கம்
இந்த 15 பேரில் முக்கியமான 3 பேர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் விலாஸ் ராவ் தேஷ்முக். இதில் தேஷ்முக் இறந்து விட்டதால் அவரது பெயரையும் நீக்கியுள்ளது ஆம் ஆத்மி.

அவர்களுக்குப் பதில் இவர்கள்
அதேசமயம், அந்த 3 பேருக்குப் பதில் ராசா, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், பவன் குமார் பன்சால் ஆகியோரது பெயர்களைச் சேர்த்துள்ளனராம்.

ஜி.கே.வாசன்- மு.க.அழகிரி
இவர்கள் தவிர மற்ற 12 பேர் - கபில் சிபல், சல்மான் குர்ஷித், கமல்நாத், எஸ்.எம்.கிருஷ்ணா, ப.சிதம்பரம், சரத் பவார், பிரபுல் படேல், ஜி.கே.வாசன், பரூக் அப்துல்லா மற்றும் முக.அழகிரி. இதில் அழகிரி தற்போது முன்னாள் அமைச்சராகி விட்டார்,. திமுகவை விட்டும் நீக்கப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் அவர் போட்டியிடும் வாய்ப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இல்லாவிட்டால் வேறு சிலர் சேர்க்கப்படலாம்
ஒருவே்ளை இந்த 15 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடாவிட்டாலோ அல்லது ராஜ்யசபா தேர்தலில் புகுந்து தப்பினாலோ அவர்களுக்குப் பதில் வேறு ஊழல் கறை படிந்தவர்களை பட்டியலில் சேர்த்து விடுமாம் ஆம் ஆத்மி.

இன்று முக்கிய ஆலோசனை
இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதில் இந்த வேட்பாளர்கள் குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. தேர்தல் உத்திகளும் இதில் தீட்டப்படவுள்ளன.

கெஜ்ரிவால் போட்டியிடுவாரா
இதற்கிடையே கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவரது கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் இன்னும் அதுகுறித்து முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது. எனவே அவர் போட்டியிடுவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதுதொடர்பாக அவர் பேசவும் மறுத்து வருகிறார்.

உ.பி., குஜராத் பட்டியல் எப்போது
முக்கியமான மாநிலங்களான உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.

ராகுலை எதிர்த்து, மோடியை எதிர்த்து.. யார் போட்டி
குறிப்பாக ராகுல் காந்திக்கு எதிரான வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிரான வேட்பாளர் குறித்தும் ஆம் ஆத்மி இன்னும் அறிவிக்கவில்லை. சோனியா காந்திக்கு எதிராக யார் போட்டியிடுவார் என்பதும் தெரியவில்லை. அதேசமயம், ராகுலுக்கு எதிராக குமார் விஷ்வாஸ் போட்டியிடுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications