"மீசையை முறுக்கி.. தொடையை தட்டி.." சினிமா ஸ்டைலில் எச்சரித்த பாலகிருஷ்ணா.. ஆந்திர சட்டசபையில் பரபர
விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபையில் இன்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாகப் பிரபல நடிகரும் எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா தனது மீசையை முறுக்கி, தொடையைத் தட்டி மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். சுமார் 300 கோடி ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து ஆந்திராவில் போராட்டங்களும் கூட அறிவிக்கப்பட்டன. சந்திரபாபு நாயுடு சிறையில் இருக்கும் நிலையில், ஆந்திர சட்டசபை கூடியது. அப்போது அங்கே நடந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது: திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதாகி சந்திரபாபு நாயுடு இப்போது ராஜமுந்திரி சிறையில் இருக்கிறார். இதற்கிடையே இன்று சட்டசபை கூடிய போது சந்திரபாபு நாயுடு கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தெலுங்கு தேசம் கட்சி சட்டசபையில் கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து அங்கே ஏற்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்திருந்தனர். இதற்கிடையே இன்று சட்டசபை கூடிய போது தான் தெலுங்கு தேசம் சட்டசபை உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்கள் சபாநாயகர் இருக்கை அருகே வந்து சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பாலகிருஷ்ணா: மேலும், அவையில் இருந்த ஆவணங்களைக் கிழித்துப் போட்டும், கைதுக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். அப்போது அங்கே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக 16 எம்எல்ஏக்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்கள் பையாவுலா கேசவ், கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி, அனகனி சத்யபிரசாத் ஆகியோர் இந்த அமர்வு முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இன்று ஆந்திரா சட்டசபையில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகரும் இந்துப்பூர் எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா தனது படங்களில் வருவதைப் போல நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபுவை நோக்கி மீசையை முறுக்கி, தொடையைத் தட்டி சவால் விடுத்தார். பாலகிருஷ்ணாவின் இந்த செயல்கள் மிரட்டல் விடுக்கும் வகையில் இருந்ததாக அமைச்சர் ராம்பாபு குற்றஞ்சாட்டினார். இதனால் அங்கே அவையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அவையைச் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
எச்சரிக்கை: இருப்பினும், பாலகிருஷ்ணாவின் இந்த செயல்கள் நேரலையில் ஒளிபரப்படவில்லை. சட்டசபை நிகழ்வுகளை ஒளிபரப்பும் கேமரா ஆளும் ஒய்.எஸ்.ஆர். எம்எல்ஏக்களை மட்டுமே காட்டியது. எதிர்க்கட்சித் தலைவர்களின் செயல்கள் அதில் எதுவும் வரவில்லை. இதனால் பாலகிருஷ்ணா சரியாக எதுபோல செய்தார் என்பது குறித்த வீடியோவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே பாலகிருஷ்ணாவின் நடவடிக்கைக்கு ஆந்திரா சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார். பாலகிருஷ்ணா நடவடிக்கை சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக முதல் எச்சரிக்கை விடுத்தார்.
மீசை இதுபோல முறுக்குவது, தொடையைத் தட்டி சவால் விடுப்பது எல்லாம் அவையின் நற்பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல் என்பதால் இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என்றும் அப்படிச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் பாலகிருஷ்ணாவை எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications