பள்ளி மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட மலையாள நடிகர் கைது
திருவனந்தபுரம்: பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததையடுத்து, பிரபல மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலையாளப்படங்களில் வில்லனாகவும், தமிழில் கும்கி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீஜித் ரவி மீது பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
14 பள்ளி சிறுமிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, ஸ்ரீஜித் ரவி தனது காரில் நாகரிகமற்ற முறையில் அமர்ந்திருந்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நடிகரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால் ஸ்ரீஜித் ரவி தன் மீது சாட்டப்பட்டள்ள குற்றத்தை முற்றிலும் மறுத்துள்ளார். அந்த இடத்தில் அவரோ, அவரது காரோ இல்லை என்று கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த மறுதினம் பள்ளியின் தலைமை ஆசிரியரால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி சிறுமிகளால் நடிகர் தவறாக அடையாளம் காட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், சிறுமிகள் புகார் கொடுத்த காரின் எண் நடிகரின் கார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காவல்துறை இரண்டு சிறுமிகளை நேரில் அழைத்தும் ஸ்ரீஜித் ரவி தான் குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பாலக்காடு அருகே உள்ள ஒட்டப்பாலம் பகுதியில் திரைப்பட சூட்டிங் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பள்ளி மாணவிகளை ரவி தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அத்துடன் அவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் மாணவிகள் புகார் செய்தனர். இதையடுத்து, பள்ளி முதல்வர் கொடுத்த புகாரின் பேரின் ரவியை கைது செய்துள்ளோம். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
