ஷூட்டிங்கில் தவறாக நடந்த ஹீரோ! செருப்பை காட்டியதும் தெறித்து ஓட்டம்! கோவாவில் குஷ்பு பகீர் தகவல்
பனாஜி: படப்பிடிப்பில் ஒரு ஹீரோ தவறான நோக்கத்துடன் தன்னிடம் பேசியதாக நடிகை குஷ்பு கூறியிருப்பது திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள திரையுலகில் நடிகைகளுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஹேமா கமிஷன் ரிப்போர்ட்டில் பகீர் தகவல்கள் இருந்தன. அதில் எந்த நடிகர்களின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்றும் இல்லாவிட்டால் கேமரா ஓடவே ஓடாது, ஆனால் நம்மை நடிக்க சொல்லுவார்கள். கடைசியில் படத்தில் வரவில்லையே என கேட்டால் அதற்கு முறையான பதில் இருக்காது என திரைத் துறையில் இருக்கும் அவலங்களை பலர் கூறி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து ராதிகாவும் தான் நடித்த மலையாள படத்தின் கேரவனில் உடை மாற்றும் அறையில் கேமரா இருந்ததாகவும் இதை அறிந்து கொண்டு ஹோட்டல் அறையில் ரூம் எடுத்து உடை மாற்றியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மலையாள நடிகர் சங்கமானது கலைக்கப்பட்டது. அதில் இருந்து மோகன்லால் உள்ளிட்டோர் பதவி விலகினர். இந்த நிலையில் மலையாள திரையுலகம் குறித்து பேட்டி அளித்த பலரும் தமிழ் சினிமாவில் இது போன்று டார்ச்சர்கள் இல்லை என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் குஷ்பு தனக்கு நேர்ந்த ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர், அங்கு நடத்தப்பட்ட விவாதத்தில் பங்கேற்று இந்தியில் பேசினார்.
அப்போது அவர் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், நான் திரைத்துறைக்கு வந்த காலகட்டத்தில் ஒரு ஹீரோ என்னிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டார். அப்போது நான் அவரிடம் எனது செருப்பை காண்பித்து எச்சரித்தேன்.
அதன் பிறகு அந்த ஹீரோ எனக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. எனவே ஆண்கள் தங்களிடம் வந்து தவறாக நடந்து கொள்ளு் போது அது குறித்து பெண்கள் வெளிப்படையாக பேச வேண்டும். எல்லாவற்றையும் விட தமக்கு சுயமரியாதைதான் முக்கியம். நம்மை நாம் மதித்தால்தான் பிறரும் மதிப்பார்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
அந்த நடிகர் யார் என நடிகை குஷ்பு தெரிவிக்கவில்லை. மேலும் அவர் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளதால் அவர் எந்த மொழி நடிகர் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. எனினும் ஒரு நடிகர் மீது குஷ்பு பாலியல் தொல்லைக்கு முற்பட்டதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஷ்பு திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார். அவர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றிவிட்டு தற்போது பாஜகவில் இருக்கிறார். அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த பதவியில் சில காலம் இருந்த அவர் அண்மையில் அதிலிருந்து விலகினார். முழு நேர அரசியலில் தன்னை இணைத்துக் கொள்ள விலகியதாக சொல்லப்பட்டது.
முன்பு ஒரு முறை ஒரு விழாவில் கூட தான் சிறு வயதாக இருக்கும் போது தன்னிடம் தனது தந்தையே பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் குடித்துவிட்டு தன் தாயை அடித்ததாகவும் குறிப்பிட்ட குஷ்பு, அந்த வயதில் இதனை எதிர்க்க தனக்கு துணிவில்லை என குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெண்கள் இது போன்ற பிரச்சினைகளை தைரியமாக கையாள வேண்டும் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications