குஜராத் தேர்தலை குழப்ப திட்டம்? 11 நாளில் 25,000 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்.. பாய்ந்த ‛பாசா’ சட்டம்
காந்தி நகர்: குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சனையை ஏற்படுத்தும் நபர்கள் என்ற அடிப்படையில் அமதாபாத், சூரத்தில் மட்டும் 25 ஆயிரம் பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் ‛பாசா' சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தேர்தல் நடக்கிறது.
2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மும்முனை போட்டி
இந்த மாநிலத்தில் பாஜக தற்போது ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இதுதவிர தற்போது புதிதாக ஆம்ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் குஜராத் மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக குஜராத்தை கட்டப்பாட்டில் வைத்து ஆட்சி செய்து வருகிறது. மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது.

மோடி-அமித்ஷா தீவிரம்
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் அவர்கள் இருவரும் தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் களம் புகுந்துள்ளன. தற்போதைய சூழலில் 3 கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றனர். இதனால் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை
இப்படி அரசியல் கட்சியினர் ஒருபக்கம் சுறுசுறுப்பாக இருக்க, மறுபுறம் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரம் காட்டி வருகிறது. பிரச்சனைகள் ஏதுமின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் வாக்குச்சாவடிகளின் நிலைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை தேர்தல் ஆணையம் கணக்கீடு செய்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான திட்டமிடலை தயாரித்து ரெடியாக வைத்துள்ளது.

11 நாளில்
இதேபோல் தேர்தலை அமைதியாக நடத்த போலீசாரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்னும் முதற்கட்ட தேர்தலுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில் தற்போதே போலீசார் ஆக் ஷனில் இறங்கி உள்ளனர். அதன்படி மாநிலத்தில் உள்ள ரவுடி பட்டியலில் உள்ளவர்கள், மேலும் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள், ஆயுதங்களில் சுற்றி வரபவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதம் 3 ம் தேதியில் இருந்து நவம்பர் 14ம் தேதிரை ஆமதாபாத் மற்றும் சூரத்தில் மட்டும் 25 ஆயிரம் போரை கைது செய்தனர். அதன்படி சூரத்தில் மட்டும் 12,965 பேரும், ஆமதாபாத்தில் 12,315 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பாசா ட்டத்தில் நடவடிக்கை
இவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சமூக விரோத செயல்களை முன்கூட்டியே தடுக்கும் Prevention of Anti Social Activities Act (Pasa) சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் வதோதரா நகரில் 1,600 பேர் முன்கூட்டியே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மீது பாசா சட்டம் பாய்ந்துள்ளது. இன்னும் தேர்தலுக்கு 2 வாரம் உள்ள நிலையில் இந்த கைது எண்ணிக்கை என்பது அதிகரிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications