புத்தாண்டை சீர்க்குலைக்க சதி? வெடிப்பொருட்களுடன் கார் பறிமுதல்.. சிக்கிய 2 பேரிடம் தீவிர விசாரணை
ஜெய்ப்பூர்: இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ராஜஸ்தானில் உள்ள டோங்க் பகுதியில் காரில் இருந்து 150 கிலோ அமோனியம் நைட்ரேட், 200 பேட்டரிகள், 1100 மீட்டர் வயர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுரேந்திரா மற்றும் சுரேந்திர மோச்சி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 2026ம் ஆண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். முக்கிய நகரங்களில் மக்கள் அதிகளவில் கூடி புத்தாண்டை வரவேற்க உள்ளனர். இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிக்கா போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

டெல்லி உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ராஜஸ்தானில் காரில் கொண்டு செல்லப்பட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இன்று வெள்ளை நிறத்தில் மாருதி சியாஸ் கார் சென்று கொண்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போலீசார் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த காரை போலீசார் தடுத்து சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் மூடைகளில் அமோனியம் நைட்ரேட் இருப்பதும், காரின் பின்புறம் டெட்டனேட்டர், பேட்டரிகள், வயர்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காரில் பயணித்த சுரேந்திரா மற்றும் சுரேந்திர மோச்சி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வெடிப்பொருட்கள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
#WATCH | Tonk, Rajasthan: DSP Mrityunjay Mishra says, "Explosives were seized from a Maruti Ciaz car. 150 kg of ammonium nitrate hidden in sacks of urea seized. In addition, police recovered 200 explosive batteries and 1100 meters of wire. Two accused have been arrested. One is… pic.twitter.com/RYPLPW7ZgE
— ANI (@ANI) December 31, 2025
இதுபற்றி போலீஸ் துணை கமிஷனர் மிருத்யுஞ்சய் மிஸ்ரா கூறுகையில், ‛‛மாருதி காரில் இருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மூயியா மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட 150 கிலோ அமோனியம் நைட்ரேட், 200 பேட்டரிகள், 1,100 மீட்டர் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.
முன்னதாக டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை 6.52 மணிக்கு சென்று கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன. இந்த கார் வெடிப்பில் 10 பேர் பலியாகினர். 32 பேர் காயமடைந்தனர்.
மேலும் காரை ஓட்டிய வந்தவன் உடல் சிதறி இறந்து கிடந்தான். அவன் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த உமர் உன் நபி என்பதும், டாக்டரான இவன் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதுபற்றி என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உமர் உன் நபி உடன் தொடர்பில் இருந்த டாக்டர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த கும்பலிடம் இருந்து அமோனியம் நைட்ரேட், பேட்டரிகள், வயர்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ராஜஸ்தானிலும் அதேபோன்ற வெடிப்பொருட்கள் காரில் சிக்கி உள்ளதால் புத்தாண்டை சீர்க்குலைக்க சதியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications