காட்டுப் பகுதியில் கிடந்தது ஷீனா போராவின் உடல் தான்: தடயவியல் சோதனையில் உறுதியானது
மும்பை: மும்பை அருகே உள்ள ரைகாட் காட்டுப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட உடல் ஷீனா போராவுடையது என்பது தடயவியல் சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ராய் ஆகியோருடன் சேர்ந்து தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். பின்னர் ஷீனாவின் உடலை காரில் எடுத்துச் சென்று மும்பையில் இருந்து 84 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரைகாட் காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்.

இந்நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்த உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றி தடயவியல் சோதனைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனையில் அந்த உடல் ஷீனா போராவுடையது என்பது உறுதியாகியுள்ளது.
எய்ம்ஸ் அதிகாரிகள் தடயவியல் சோதனை அறிக்கையை ஷீனா கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளிடம் அளித்துள்ளனர். இந்திராணி ஷீனாவை 2012ம் ஆண்டு கொலை செய்த போதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தான் கைது செய்யப்பட்டார். அவருடன் சஞ்சீவ் மற்றும் ராயும் கைது செய்யப்பட்டனர்.
ராய் பாரில் குடித்துவிட்டு போதையில் ஷீனாவின் கொலை பற்றி போலீஸ் இன்பார்மரிடமே உளறியதால் அவர்கள் அனைவரும் சிக்கினர். ஷீனா வழக்கில் சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications