விமான விபத்தில் பலி.. குஜராத் மாஜி முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் கண்டுபிடிப்பு.. எப்படி?
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடல் கருகி பலியானார். இந்நிலையில் தான் அவரது உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகினர்.
மேலும் மருத்துவ விடுதியில் உணவு சாப்பிட்டவர்கள், அருகே குடியிருப்பில் இருந்தவர்கள் என்று மொத்த பலி எண்ணிக்கை 270யை கடந்துவிட்டது. இந்த விமான விபத்தில்குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானார். இவர் 2016 ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் 2017 ம் ஆண்டு டிசம்பர் 26 வரை முதல் முறையாக முதல்வராக இருந்தார். அதன்பிறகு 2017 டிசம்பர் 26ம் தேதி முதல் 2021 செப்டம்பர் 13ம் தேதி வரை 2வது முறையாக முதல்வராக இருந்தார். இவர் லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க விமானத்தில் பயணித்தபோது விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
விஜய் ரூபானி உள்பட விமானத்தில் பயணித்த அனைவரின் உடலும் தீக்கிரையானது. இதனால் அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அடையாளம் காணும் பணி நடந்தது. அந்த வகையில் இன்று விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. டிஎன்ஏ சோதனை மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது. விஜய் ரூபானியின் குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ ஒரு உடலுடன் ஒத்துப்போனது. இதையடுத்து அது தான் விஜய் ரூபானியின் உடல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதி செய்துள்ளார். விஜய் ரூபானியின் உடலுக்கு ராஜ்கோட்டில் இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில், ‛‛முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வர் பூபேந்திர படேல், விஜய் ரூபேனியின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவரது இறுதி சடங்குகிற்கு தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதி சடங்கு ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது'' என்றார்.
முன்னதாக பிரதமர் மோடி, விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்கூறினார். விமான விபத்து நிகழ்ந்த மறுநாள் பிரதமர் மோடி சம்பவ இடத்தை பார்வையிட்டார். அந்த சமயத்தில் அவர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications