மே31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து! 40000 இந்தியர்களுக்கு சிக்கல்.. 2 நாடுகளை நம்பிதான் எல்லாமே!
டெல்லி: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம், சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களாக அமெரிக்கா - ஈரான் மாறி மாறி எச்சரிக்கைகளை விடுத்து வரும் வேளையில் போர் தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இந்த சூழல்நிலையில் இந்தியாவின் முன்னணி பயணிகள் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

மே 31 வரை சேவை நிறுத்தம்
ஏர் இந்தியா நிர்வாகிகள் பிடிஐ செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், டெல்லி - டெல் அவிவ் இடையிலான நேரடி விமான சேவை மே 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு, இப்பகுதியில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அபாயங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது, பல சர்வதேச விமான நிறுவனங்களும் டெல் அவிவ் வழித்தடத்தில் சேவைகளை நிறுத்தியுள்ளன. சில இஸ்ரேல் விமான நிறுவனங்கள் மட்டுமே கடுமையான கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன என தெரிவித்தனர்.
சிக்கலில் இந்தியர்கள்
இஸ்ரேலில் வசிக்கும் 40,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தத்தால் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது வேலை தொடர்பான காரணங்களுக்காகவோ இஸ்ரேல் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் தாய் நாடு திரும்ப விரும்புபவர்கள் தற்போது மாற்று வழிகளை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
போர் சூழ்நிலை தீவிரமடையும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பலர் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்புகின்றனர்.
இந்திய தூதரகத்தின்படி, 2023-ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் மொத்த இந்திய மக்கள் தொகை 85,000 ஆகும். இவர்களில் பெரும்பான்மையானோர் 1950கள் மற்றும் 1960களில் இந்தியாவிலிருந்து வந்த இந்திய வம்சாவளி யூதர்கள் ஆவர். 2023-ஆம் ஆண்டில் 18,000 இந்திய குடிமக்கள் மட்டுமே அந்நாட்டில் பணியில் இருந்துள்ளனர். தற்போது இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் மக்கள் தொகை 1 முதல் 1.15 லட்சமாக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் இந்திய குடிமக்களின் எண்ணிக்கை தோராயமாக 40,000 ஆக இருக்கும். தூதரகத் தரவுகளின்படி, பெரும்பாலான இந்தியர்கள் முதியோர் பராமரிப்பு பணிகளில்லும், கட்டுமானத் தொழிலாளர்களாகவும் பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாற்று பயண வழிகள்
இஸ்ரேலில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு தற்போது நேரடி விமான சேவை இல்லை. அதனால், இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் நேரடியாக விமானத்தில் பறக்க முடியாது. இதனால் முதலில் நில எல்லைகள் (land crossings) வழியாக அண்டை நாடுகளான ஜோர்டன் அல்லது எகிப்து நாடுகளுக்குள் செல்ல வேண்டும்.
அதாவது, இஸ்ரேலில் இருந்து கார் அல்லது பேருந்து மூலம் எல்லையை கடந்து ஜோர்டன் அல்லது எகிப்து சென்று, அங்கிருந்து தான் விமானம் மூலம் இந்தியா திரும்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த சிக்கலான பயணத்தில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-ல் இருக்கும் இந்திய தூதரகம் உதவி செய்து வருகிறது. பயண ஏற்பாடுகள், வழிகாட்டுதல், அவசர உதவி போன்றவற்றை வழங்கி, இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்கின்றனர்.
ஈரான் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் போரை அமெரிக்கா உடன் ஆதரிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் என அறிவித்திருக்கும் வேளையில் இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரேல் நாட்டிலும் பதற்றம் அதிகரித்து முழு ராணுவமும் தயார் நிலையில் உள்ளது.
இந்திய தூதரகம்
இதற்கிடையில் டெல் அவிவ்-ல் இருக்கும் இந்திய தூதரகம், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. 24 மணி நேர அவசர உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பெரிய அளவிலான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை அடையாளம் காணவும் இந்திய தூதரகத்திற்கு உதவுகிறது.
ஏர் இந்தியா சேவை
டெல்லி - டெல் அவிவ் நேரடி விமான சேவை, 2025 ஜனவரி 1ஆம் தேதி பெரும் இடைவெளிக்கு பின்பு மீண்டும் தொடங்கப்பட்டது. வாரத்திற்கு நான்கு சேவைகள் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் மூலம் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால், பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, இந்த சேவைகள் படிப்படியாக பாதிக்கப்பட்டு தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் மோதல் தொடரும் வரை, விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது சாத்தியமில்லாததாகத் தெரிகிறது. இது இந்தியர்களின் பயண திட்டங்களுக்கும், முக்கிய நகரங்கள் மற்றும் நாடுகளின் இணைப்புக்கும் பெரிய சவாலாக மாறியுள்ளது. பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை இந்த தற்காலிக முடிவுகள் நீடிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications