கொல்கத்தா மருத்துவர்கள் மீதான தாக்குதல்.. தமிழகத்தில் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
Recommended Video
சென்னை: கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது. மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்துபடி பணியாற்றி வருகின்றனர்.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவரை தாக்கியுள்ளனர்.
இதை கண்டித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டும் பேண்டேஜ் அணிந்தும் பணியாற்றினர்.

5ஆவது நாளாக போராட்டம்
மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மம்தா பானர்ஜி கேட்டு கொண்டார். ஆனால் அதையும் மீறி 5-ஆவது நாளாக போராட்டம் நடத்தப்படுகிறது.

மத்திய அமைச்சர்
இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்தகுவம் சார்ந்த ஊழியர்களுக்கு எதிராக வன்முறை எந்த வடிவில் நிகழ்ந்தாலும் அதை தடுத்து நிறுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கேட்டுக் கொண்டார்.

மருத்துவர்கள்
கொல்கத்தா மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ அறிவித்தது. அதன்படி வன்முறையை கண்டிக்கும் விதமாக இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிபந்தனை
அதே வேளையில் அவசர சிகிச்சைகளும், தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகியன தங்கு தடையின்றி தொடரும் என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போராட்டம் நடத்தாமல் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியா முழுவதும் 10 ஆயிரம் மருத்துவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

முடங்கிய மருத்துவ சேவை
தமிழகத்தில் புறநோயாளிகள் பிரிவு இயங்காததாலும், உள்நோயாளிகளை மருத்துவர்கள் சந்திக்காததாலும் நோயாளிகள் கடும் அவதிப்பட்டுள்ளனர். நியாயம் கிடைக்காமல் மருத்துவ சேவையாற்ற மாட்டோம், உங்களை காக்க கருவியை எடுத்தால், எங்களை கொல்ல கத்தியை எடுக்கிறீர்கள் போன்ற பதாகைகளுடன் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications