சந்திரபாபு நாயுடு அமைச்சரவை அறிவிப்பு..மகனுக்கு முக்கிய துறைகள்! துணை முதல்வரானார் பவன் கல்யாண்!
அமராவதி : கடந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் பெரு வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஆந்திராவின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 24 அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து களம் கண்டது.

ஆந்திர முன்னால் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவோ பாஜக பவன் கல்யாண் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டது.
இந்த நிலையில் பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தங்களது தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார். ஆளுநர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து கடந்த 12ஆம் தேதி விஜயவாடா விமான நிலையம் அருகே இருக்கும் கேசரப்பள்ளி என்ற பகுதியில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ பி நட்டா, உள்ளிட்டோரும் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆந்திராவின் முதலமைச்சர் ஆக சந்திரபாபு நாயுடு பதவியேற்று கொண்டார். அவருடன் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டம் ஒழுங்கு, பொதுத்துறை மற்றும் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத இலாக்காக்களை கவனிக்கிறார். நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி, ஊரக குடிநீர் வழங்கல், சுற்றுச்சூழல், வனம் அறிவியல் மற்றும் டெக்னாலஜி துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷுக்கு மனிதவளத்துறை மேம்பாட்டு துறை, ஐடி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஆர்டிஜி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன

கிஞ்சரப்ப அச்சன் நாயுடு, விவசாயம் கூட்டுறவு வணிகம் கால்நடைத்துறை பால்வளத்துறை மீன்வளத்துறை அமைச்சராகவும் கொள்ளு ரவீந்திர கனிமம் மற்றும் கலால் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோல நடைண்டலா மனோகர், பொங்குரு நாராயணா, அனிதா வங்காளப்புடி, சத்திய குமார் யாதவ், நிர்மலா ராம நாயுடு, நாசியம் முகமது பாரூக், ஆனம் ராமநாராயண ரெட்டி, பாயவுல கேசவ், அங்கன்னி பிரசாத், கொலுசு பார்த்தசாரதி, டோலா பாலா வீராஞ்சேனாயே சுவாமி, கோட்டிபட்டி ரவிக்குமார், கண்டுள்ள துர்கேஷ், கும்மிடி சந்திய ராணி, பி சி ஜனார்த்தன ரெட்டி, டிஜி பரத், சவிதா, வசம் செட்டி சுபாஷ், கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ், மண்டிபள்ளி ராம் பிரசாத் ரெட்டி ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications