கிடைத்தது நிபந்தனை ஜாமீன்.. பஸ்ஸிலேயே போய் ஆஜரான அமர் பிரசாத் ரெட்டி.. அம்பை கோர்ட் போட்ட உத்தரவு!
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பனையூர் வீட்டுக்கு அருகே பாஜக கொடிக்கம்பம் அனுமதியின்றி நடப்பட்ட விவகாரத்தில், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் அந்த கொடிக் கம்பத்தை அகற்றினர். அப்போது, பாஜகவினர் ஜேசிபி வாகனத்தின் மீது கல் வீசி சேதப்படுத்தினர். இதையடுத்து, பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்தனர் கானாத்தூர் போலீசார்.

அன்று மாலையே தமிழ்நாடு பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அமர் பிரசாத் ரெட்டி மீது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா விளம்பரத்தில் இடம்பெற்ற மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடி படத்தை ஒட்டியது தொடர்பாக, கோட்டூர்புரம் போலீசார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர்.
மேலும், வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது போக்குவரத்து காவலர்களிடம் தகராறு செய்தது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் அமர் பிரசாத். ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டாலும், மற்ற வழக்குகள் ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திலும் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை செப்டம்பர் 3ஆம் தேதி தென்காசியில் நடைபெற்ற போது, போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது என அமர் பிரசாத் ரெட்டி மீது அங்கு 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிலும் காவல் துறையினர் அமர் பிரசாத் ரெட்டியை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டியை காவல் துறையினர்
ஆஜர்படுத்துவதற்காக அமர்பிரசாத் ரெட்டி அம்பாசமுத்திரம் அழைத்துச் செல்லப்பட்டார். கிளைச் சிறைக்கு கொண்டுவரபட்டார். அமர் பிரசாத் ரெட்டியை கோயம்பேட்டில் இருந்து தென்காசிக்கு அரசு பேருந்தில் போலீசார் அழைத்துச் சென்றனர்.
அம்பாசமுத்திரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அம்பாசமுத்திரம் பகுதியில் இன்று மழை தூறிக் கொண்டிருந்தபோதும், அமர் பிரசாத் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது அங்கு ஏராளமான பாஜகவினர் குவிந்து கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமர் பிரசாத் ரெட்டிக்கு அம்பை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. போலீசாரை பணி செய்ய விடாமல் தகராறு செய்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர் மற்ற வழக்குகளில் நீதிமன்றக் காவலில் இருப்பதால் இன்றே சென்னை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications